×

அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டி கழுத்து நெரித்து கொலை

​​​​​​​

 

அம்பத்தூரில் 70 வயது மூதாட்டி கை, கால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அம்பத்தூர் அடுத்த  சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் (70) என்பவரை நேற்று  ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியதாக   காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, பொன்னம்மாள் கைகளும் கால்களும் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும், வீட்டின் பொருட்கள் சிதறியும், பீரோ மற்றும் அலமாரிகள் திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்களும் கலைக்கப்பட்டிருந்தன. இது குறித்து  இறந்தவரின் 5வது மகள் கெஜலட்சுமி (45), க/பெ நடராஜன், எண்.2, சங்கரன் தெரு, விவேகானந்தா நகர், ஆவடி என்பவர் அளித்த புகாரின் பேரில் T4 புதூர் காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக KMC மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையின் போது, இறந்த பொன்னம்மாளின் கணவர் தாமோதரன் 2006-ஆம் ஆண்டில் இறந்த பிறகு, அவர் சம்பவ இடமான எண்.1/93, துலுக்கானந்தம்மன் கோவில் 7-வது தெரு, சூரப்பட்டு என்ற விலாசத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி அவரவர் தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும், இவர் தனது குடும்ப சொத்தினை விற்பதற்கு ஏற்பாடு செய்து ரூ.31 லட்சம் முன்பணமாக பெற்று தனது 6 மகள்களுக்கும் தலா 5 லட்சம் வீதம்  பிரித்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள 1 லட்சம் ரூபாயை வைத்திருந்துள்ளார். நேற்று  ஆட்டோவில்  வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து,  அங்கிருந்து வெளியேறியது. கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவு உதவியுடன் தெரியவந்தது. இதையடுத்து  சூரப்பட்டை சேர்ந்த பழனி (எ), செல்வம் (எ) காஜாமொய்தீன் (எ) மாதவன் (44) மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான துளசிதாஸ் (51) இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் சூரப்பட்டை சேர்ந்த சேர்ந்த பழனி (எ), செல்வம் (எ) காஜாமொய்தீன் (எ) மாதவன், கொலையுண்ட பொன்னம்மாள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர்.   பொன்னம்மாள் தனது நிலத்தை விற்பதற்கு  பழனி இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் பொன்னம்மாள் நிலத்திற்காக முன்பணம் பெற்றது பழனிக்கு தெரிய வந்துள்ளது.  பணம் வீட்டில் இருக்கும் என்றும், மொத்த பணத்தையும் கொள்ளையடித்து விட்டால் தனது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் தனது நண்பரான வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துளசிதாசுடன் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.  நிலத்தினை வாங்க இருந்தவர் முன்பணத்தினை பொன்னம்மாளின் 6 மகள்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், பொன்னம்மாளுக்கு ரூ.1 லட்சத்தையும் வங்கி மூலம் செலுத்தியுள்ளார். இதனையறியாமல் பழனி பணம் முழுவதும் வீட்டில் இருப்பதாக நினைத்து வீட்டிற்கு வந்து பொன்னம்மாளை கொலை செய்து விட்டு, பணம் இல்லாததால் அவர் அணிந்திருந்த 3 சவரன் மதிப்புள்ள வளையல் மற்றும் கம்மல்களை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடருந்து  கொள்ளை போன பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்ட  இருவரும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என கூறப்படுகின்றது.இருவர் மீதும் வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகள் உள்ளது.