“அவன எங்க கிட்ட ஒப்படைங்க”- 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை வெளுக்க ஊரே திரண்டு வந்த நிகழ்வு
குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தது கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பேக்கரி தொழிலாளியின் 7 வயது மகள் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் மாயமானார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி அழுது கொண்டு வந்த பொழுது சிறுமியின் உடைகளில் ரத்தக்கரை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்பொழுது அந்த குழந்தையை யாரோ பாலியல் துன்புறுத்தியது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் போலீசார் அதிவேகமாக செயல்படத் தொடங்கினர்.
இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடி டிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கு இடமான நபர் அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரின் புகைப்படத்துடன் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தேடத் தொடங்கினர். இரவு முழுதும் தேடியும் சிக்காத சூழ்நிலையில், போலீசார் 10க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்த பலர், இந்த வீட்டில் மர்ம ஒரு நபர் இருப்பதாக பொதுமக்கள் பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கவுதமன், ஆய்வாளர் தவமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அது வாக்குவாதமாக மாறியது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் யாரும் கலைந்து செல்லாததால் காவல் நிலையத்தை சுற்றி பெரும் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.