×

சொத்துக்காக பெட்ரோல் குண்டு வீசி குடும்பத்தினர் கொலை... தம்பதிக்கு 4 தூக்கு தண்டனை; ஆயுள், ரூ.6 லட்சம் அபராதம்!

 

சொத்துக்காக சொந்த குடும்பத்தினரை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளனர். அப்படியான ஒரு சம்பவம் தான் 2019ஆம் ஆண்டு விழுப்புரத்திலும் அரங்கேறியது. திண்டிவனம் அருகே உள்ள காவேரிபாக்கத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜ் -கலா. இவர்களது மகன்கள் கோவர்த்தனன் (35), கவுதமன் (26). கோவர்த்தனன் மனைவி தீபா காயத்ரி (29). இவர்கள் 5 பேரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டிலுள்ள ஏசி அறையில் ராஜ், கலா, கவுதமன் மூவரும் தூங்கினர்.

மற்றொரு அறையில் கோவர்த்தனனும், தீபா காயத்ரியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த அறையில் ஏசி வெடித்து தீப்பற்றி எரிவதாக கோவர்த்தனன் அலறினார். வீட்டின் வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் ராஜ், கலா, கவுதமன் மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஆனால் அறையை ஆய்வு செய்த காவல் துறையினர் சந்தேகமடைந்தனர். காரணம் ராஜ் தலையில் அடிபட்டு, அந்த அறையில் ரத்தம் சிதறியுள்ளது. 

கவுதமன் தலையிலும் காயம் இருந்துள்ளது.  கலா எரிந்த நிலையில் கிடந்துள்ளார். தீப்பிடித்து எரிந்த அறையில் பெட்ரோல் வாசனை அடித்ததும் கண்டறியப்பட்டது. அறை முழுவதும் தீப்பற்றிய பிறகே ஏசிக்கு தீ பரவியது எனவும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். அதற்குப் பின் கேட்கும் விதத்தில் கோவர்த்தனனிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையின்போது, "எங்களுக்கு சொந்தமான இடத்தை விற்று பணத்தை தம்பிக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். இதனால் எனக்கும் அப்பாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. ஆகவே மூவரையும் கொலைசெய்து சொத்தை அபகரிக்க நினைத்தேன்.

அதன்படி பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் வீசி தீ வைத்தேன். அப்பா எழுந்து தப்பிக்க முயன்றதால் அவரை பாட்டிலால் தலையில் அடித்து மீண்டும் அறைக்குள் தள்ளி கதவை பூட்டினேன். அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததும் ஏசி வெடித்து தீப்பிடித்ததாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்தோம்” என வாக்குமூலம் அளித்தார். பூந்தமல்லியிலுள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கோவர்த்தனன், தீபா காயத்ரி இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தது. 

இதையடுத்து இருவருக்கும் தலா 4 தூக்கு தண்டனையும், வெடிமருந்து பொருட்கள் சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். அத்துடன் ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.  ஒரு வயது கைக்குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான கோவர்த்தனனும், தீபா காயத்ரியும் தீர்ப்பை கேட்டவுடன் கதறி அழுதனர். இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர். ஆனாலும், சூழ்நிலை சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கை, ரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை வைத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் விஜயராஜ் தெரிவித்தார்.