14 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்! தாயின் கள்ளக்காதலனால் நேர்ந்த கொடூரம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தாயின் தவறான உறவால் 14 வயது பள்ளி மாணவி ஏழு மாதக் கர்ப்பமான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமும், கூலித் தொழிலுமே பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. வறுமை மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இப்பகுதி மக்கள் வேலை தேடி வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது, தங்களது குழந்தைகளை உறவினர்களிடமோ அல்லது முதியோர்களிடமோ விட்டுச் செல்கின்றனர். இதனால் போதிய கண்காணிப்பின்றி குழந்தைகள் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அவலம் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது.
செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த பெண்ணின் 14 வயது மகள் (ஒன்பதாம் வகுப்பு மாணவி) மீது குணசேகரனின் பார்வை விழுந்துள்ளது. தாய்க்குத் தெரிந்தே அந்தச் சிறுமிக்குக் குணசேகரன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதன் விளைவாக அந்தச் சிறுமி தற்போது ஏழு மாதக் கர்ப்பமாகியுள்ளார். சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த தாய், அவரைச் செங்கம் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 7 மாதக் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்துச் செங்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணமான குணசேகரனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயின் துணையோடு மகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் பகுதியில் இது போன்ற பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.