×

பள்ளி திறந்த முதல்நாளே கொடூரம்! கண்மாயில் அமர்ந்து மது அருந்திய 10ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை

 

சிவகங்கை, திருப்பத்தூரில் கீழக்காவானூர் கண்மாய் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 10-ம் வகுப்பு மாணவன்  சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கைமாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழக்காவனூர் கண்மாய் பகுதியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் கழுத்து அறுபட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஸ்வின் (15). இவர் அருகிலுள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு கிளம்பியவர், பள்ளிக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக அஸ்வின் மற்றும் அவரது நண்பர்கள் இளந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25), காரையூர் பகுதியை சேர்ந்த கணேசன் (22) மற்றும் அஜய் (15) ஆகியோருடன் கிழக்காவலூர் கண்மாய் கரையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு நண்பர்கள் இணைந்து அஸ்வினை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். 

இன்று அதிகாலை கண்மாய் கரையில் இறந்த நிலையில் அஸ்வினின் உடலை கண்ட கிராம மக்கள் கிழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.