×

பொள்ளாச்சி, ரஃபேல் விவகாரம்; ஊடக தர்மம் குறித்து அமீர் தடாலடி பேட்டி!

பொள்ளாச்சி விவகாரத்தில் ஊடகங்கள் தங்களது பணியை சரியாகவே செய்துள்ளது என இயக்குனரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார் சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் ஊடகங்கள் தங்களது பணியை சரியாகவே செய்துள்ளது என இயக்குனரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பயங்கரம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு
 

பொள்ளாச்சி விவகாரத்தில் ஊடகங்கள் தங்களது பணியை சரியாகவே செய்துள்ளது என இயக்குனரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் ஊடகங்கள் தங்களது பணியை சரியாகவே செய்துள்ளது என இயக்குனரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பயங்கரம்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இது தொடர்பான நெஞ்சை பதைபதைக்க செய்யும் பெண்ணின் கதறல் அடங்கிய வீடியோவை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார்.

ஊடக தர்மம்:

இந்நிலையில் இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு நடிகர் அமீர் அளித்துள்ள பேட்டியில், பொள்ளாச்சியில் நடைபெற்றது திட்டமிட்ட குற்றம். ஒரு குற்றம் அரசியல் பின்புலத்தின் மூலம் மறைக்கப்படும் பட்சத்தில் அதனை வெளியே கொண்டு வருவது தான் பத்திரிகையின் கடமை. பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இது ஊடக தர்மமே என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நாட்டின் ஒவ்வொரு துறையும் அவர்களது பணியை செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் தலையீடுகள் இருந்தால் அது சரியாக இருக்காது. அரசியல் மட்டுமே நாடு அல்ல. எம்.பி.,-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மக்களுக்கான பிரதிநிதிகள். நமக்காக தான் அவர்கள்; அவர்களுக்காக நாம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரம்:

ரஃபேல் விவகாரம் குறித்து பேசிய அமீர், ஊழல் நடக்கவே இல்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், ராகுல்காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சில ஆவணங்களை காணவில்லை என அரசு கூறுகிறது. பின்னர் அந்த ஆவணங்கள் பிரதி எடுக்கப்பட்டு வந்துவிட்டது என அரசு கூறுகிறது. ரஃபேல் ஊழல் குறித்து சில தகவல்களை பத்திரிகையாளர் என்.ராம் வெளியிடுகிறார். குற்றத்தை வெளியே கொண்டு வர வேண்டியது பத்திரிகையின் கடமை தானே. இதனை செய்யாமல் இருந்தால் தான் பத்திரிகை துறையை கேள்வி கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏதோ ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அல்ல பொள்ளாச்சி விவகாரம் என சுட்டிக் காட்டும் அமீர், நட்பு, காதல், ஆசை வார்த்தைகளை காட்டி நயவஞ்சகமாக செய்த குற்றம். வீடியோ எடுத்து மிரட்டி கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, பின்னர் மற்றவர்களுக்கு அப்பெண்களை பகடைக்காயாக உபயோகித்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களை வளர விடுவது சரி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஏன் கொந்தளிக்க போகிறார்கள்:

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் கொந்தளித்திருக்க மாட்டார்கள். தலைமைறைவாக இருந்த இந்த குற்றத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு வெளியிட்ட வீடியோவில் இதில் அரசியல் கட்சிகள் இருக்கிறது என கூறுகிறார். எனவே, சந்தேகங்கள் எழுகிறது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. அவர்கள் விளக்கமளிக்காத பட்சத்தில் பத்திரிகைகள் மூலமாக அவை வெளியே வருகிறது. ஊடகம் தனது கடமையை செய்கிறது. தங்கள் மீது தவறு இல்லை என்றால் நீதிமன்றம் மூலமாக நிரூபிக்கலாம். அதை விடுத்து நக்கீரன் மீது புகார் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தான் அரசு:

மக்கள் எழுச்சி, அறிவுக்கூர்மையை எந்த அரசும் விரும்புவது இல்லை என தெரிவித்துள்ள அமீர், அரசை பொறுத்தவரை ஒட்டு போடணும், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், மக்கள் அடிமையா இருக்கணும், சுதந்திரமா இருக்க கூடாது, தன்னெழுச்சியாக எதையும் செய்து விட கூடாது என்றும் சாடியுள்ளார்.