×

“விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு” – முதல்வருக்கு நன்றி சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்!

ஒரு மாநிலத்தின் மிக மிக முக்கிய நபர் (விஐபி) என்றால் அது முதலமைச்சர் தான். அவரைப் போற்றுபவர்களும் இருப்பார்கள். இகழ்பவர்களும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். அவர்கள் வேறெங்கும் பயணம் மேற்கொள்ளும்போது இடையூறு ஏற்படாத வண்ணம் போகும் வழித்தடங்களில் தமிழ்நாடு காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் இப்பணிகளில் குறைவான காவல் துறையினரே ஈடுபடுத்தப்பட்டனர். முதலமைச்சராக ஜெயலலிதா வந்த பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டார். அவர் செல்லும் வழி நெடுகே
 

ஒரு மாநிலத்தின் மிக மிக முக்கிய நபர் (விஐபி) என்றால் அது முதலமைச்சர் தான். அவரைப் போற்றுபவர்களும் இருப்பார்கள். இகழ்பவர்களும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். அவர்கள் வேறெங்கும் பயணம் மேற்கொள்ளும்போது இடையூறு ஏற்படாத வண்ணம் போகும் வழித்தடங்களில் தமிழ்நாடு காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் இப்பணிகளில் குறைவான காவல் துறையினரே ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலமைச்சராக ஜெயலலிதா வந்த பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டார். அவர் செல்லும் வழி நெடுகே ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். அவருக்கு மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருந்தாலும் தனக்கென்று தனியாக ஒரு பாதுகாப்புப் பிரிவை உருவாக்கி அதற்கு எஸ்பி அளவிலான உயர் அதிகாரிகளையும் நியமித்தார். இப்படி தான் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இந்தப் பாதுகாப்புப் பணியில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஒரு இடத்தில் 12 மணி நேரம் நிற்க வேண்டும் என்றாலும் கூட அவர்களுக்கு விலக்கு கிடையாது. ஆண் காவலர்களை விட பெண் காவலர்களை இன்னலுக்குள்ளாகினர். இயற்கை உபாதைகள் வந்தால் கூட அவர்களால் எங்கேயும் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டது. சரியான சாப்பாடு கிடைக்காமல் போவது உள்ளிட்ட சிரமங்களுக்கு நடுவே தான் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இச்சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அதன்படி தான் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம்; அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவையடுத்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவாக பெண் காவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆணையிட்டிருக்கிறார். பெண் காவலர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தற்போது மாநாடு பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் படும் அவஸ்தைகளை எடுத்துச்சொல்லும் விதமாக மிக மிக அவசரம் என்ற படத்தைத் தயாரித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் “மிகமிக அவசரம்” படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமை கொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.