×

நாக சைதன்யா- சமந்தா விவகாரம்: தெலங்கானா அமைச்சருக்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் கண்டனம்..  

 


 சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து  அமைச்சரின் அவதூறான கருத்துக்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும்  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில்,  நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவும் - நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். கே.டி.ராமராவ், நடிகை சமந்தா மீது விருப்பம் கொண்டு கேட்டதாகவும்,  அதற்கு நாகார்ஜுனாவும் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதனாலேயே  அவர் நாக சைதன்யா  அக்கினேனியை விவாகரத்து செய்தார் என்றும் பேசியிருக்கிறார்.  

அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த பேட்டி வைரலான நிலையில், தெலங்கு திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடிகர் நாகார்ஜுனா, சமந்தா, அமலா, நாக சைதன்யா, நடிகர் நானி  உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும், அல்லு அர்ஜுனும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர், “கொண்டா சுரேகா அவர்களே, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது புதிய வீழ்ச்சி. பொது மக்கள், குறிப்பாக உங்களைப் போன்ற பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள், கண்ணியத்தையும் தனியுரிமையையும் காக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அலட்சியமாக வீசுவது, குறிப்பாக அதே பார்வையில் திரையுலகைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மற்றவர்கள் நமக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது நாம் அமைதியாக இருக்க மாட்டோம். ஜனநாயக இந்தியாவில் இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தையை நம் சமூகம் இயல்பாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது சமூகம் இத்தகைய பொறுப்பற்ற நடத்தையை இயல்பாக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். 


இதேபோல் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பதிவில், “திரைப்பட நடிகர்கள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து பேசப்படும் ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். இது மிகவும் அவமரியாதைக்குரியது. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசியல் கட்சிகள் அதிக பொறுப்புடனும் , தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் வகையிலும், குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.