×

சிங்கிள் டேக்கில் அசத்திய சிம்பு.. மாநாடு படக்குழு வெளியிட்ட அசத்தல் வீடியோ...

 


வெங்கட் பிரபு இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள  திரைப்படம் ‘மாநாடு’..இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும்  நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தத் திரைப்படம்  பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி கடந்த 25 ஆம் தேதி வெளியானது.  யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொசக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை “வந்தான் .. சுட்டான்.. போனான்.. ரிப்பீட்டு’ என்ற எஸ்.ஜே சூர்யாவின் வசனத்திற்கு ஏற்ப ரிப்பீட் மோடில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் போட்டிபோட்டு நடித்திருக்கும் மாநாடு படத்திற்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் பிரபல ஓடிடி தளமான சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது   கிளைமாக்ஸுக்கு முன்பாக சிம்பு,  எஸ்.ஜே. சூர்யாவிடம் உருக்கமாக பேசும் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.

இந்தக் காட்சியில்  சிம்பு சிங்கிள் டேக்கில் நடித்து அசத்தியிருக்கிறார்.  சுமார் 5 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோவில் சிம்பு முகபாவனைகளிலேயே கலக்கியிருக்கிறார். படத்தில் இந்த காட்சியில்  சிம்பு  பேசும்போது மற்றவர்கள் கவனிப்பது போல்  கட் செய்யப்பட்டு காட்டப்பட்டிருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது அந்தக் காட்சியை சிம்பு 5 நிமிடம் முழுமையாக எந்த கட்டும் இல்லாமல் பேசியிருந்ததாக வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.  இந்த வீடியோவை  மாநாடு தயாரிப்பு நிறுவனமான வி ஜவுஸ் புரொடக்‌ஷன்ஸ்  யூடியூபில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.