×

2020 ரீவைண்ட் : இந்தாண்டு மறைந்த திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

2020 ஆம் ஆண்டை அத்தனை சீக்கிரம் யாராலும் கடந்து விட முடியாது. கொரோனாவை சந்தித்த அத்தனை பெரும் போராட்டத்தை பற்றி ஒருமுறையாவது நம் வாழ்நாளில் பேசி விட்டு தான் செல்வோம் . அந்த அளவிற்கு கொரோனா பாதிப்பு பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. அதே சமயம் இந்தாண்டு திரையுலகிற்கு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்தது எனலாம். காரணம் திரையுலகை சேர்ந்த பலர் இந்தாண்டில் மரணமடைந்து மீளா துயரை அளித்து விட்டு சென்றுள்ளனர். கோலிவுட், பாலிவுட் என பல மொழி
 

2020 ஆம் ஆண்டை அத்தனை சீக்கிரம் யாராலும் கடந்து விட முடியாது. கொரோனாவை சந்தித்த அத்தனை பெரும் போராட்டத்தை பற்றி ஒருமுறையாவது நம் வாழ்நாளில் பேசி விட்டு தான் செல்வோம் . அந்த அளவிற்கு கொரோனா பாதிப்பு பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. அதே சமயம் இந்தாண்டு திரையுலகிற்கு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்தது எனலாம். காரணம் திரையுலகை சேர்ந்த பலர் இந்தாண்டில் மரணமடைந்து மீளா துயரை அளித்து விட்டு சென்றுள்ளனர். கோலிவுட், பாலிவுட் என பல மொழி கலைஞர்கள் இந்தாண்டு இந்த உலகை விட்டு சென்றுள்ளனர். அந்த வகையில் இந்தாண்டு நம்மை விட்டு சென்ற பிரபலங்களை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நடிகர் விசு

இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட விசு(74) மார்ச் மாதம் 22 ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இவர் இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் இன்றளவும் மக்கள் மத்தியில் ரசிக்கும் படமாகவே உள்ளது. இப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றது. குடும்ப படங்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்ற புகழ் விசுவையே சேரும்.

நடிகர் சேது ராமன்

நடிகரும் மருத்துவருமான சேதுராமன்(37) கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் காமெடி திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த இவர் வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சேது ராமனின் திடீர் மரணம் திரையுலகில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம்.

சிரஞ்சீவி சர்ஜா

தெலுங்கு நடிகரரும் பிரபல நடிகை மேக்னாவின் கணவருமான சிரஞ்சீவி சர்ஜாவும் (35) இந்தாண்டு தான் நம்மை விட்டு பிரிந்தார். இவர் ஜூன் 7 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார். இவரது மறைவு ஒரு பக்கம் சோகத்தை தந்தாலும், ஒருபுறம் 4 மாத கர்ப்பிணி மனைவியாக மேக்னா கதறியது பலரையும் உலுக்கியது எனலாம். தற்போது மேக்னாவுக்கு 4 மாதத்தில் அழகான ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி

தமிழில் உத்தமபுத்திரன், ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல குணச்சித்திர நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி (74). ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நடிகர் வடிவேல் பாலாஜி

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி(45) செப்டம்பர் 10 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேலு பாலாஜி அது இது எது என்ற ஷோவின் மூலம் பலரின் ஆல்டைம் பேவரைட் ஆனார். எப்போதும் சிரிப்பை மட்டுமே நமக்கு கொடுத்த வடிவேல் பாலாஜி கடைசியாக நம்மில் பலரையும் கண்ணீர் கடலில் மிதக்கவிட்டு சென்றார்.

நடிகர் ப்ளோரன்ட் பெரைரா

பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா தமிழ் திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் பெரைராவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தனது 67ஆவது வயதில் காலமானார். நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ப்ளோரன்ட் பெரைரா. இதை தொடர்ந்து கும்கி,கயல், தொடரி, பொதுவாக எம்மனசு தங்கம், தர்மதுரை உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளிலும் நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(74) கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா குணமாகியும், உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பலியானார். எஸ்பிபியின் இறப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை கொடுத்தது.

நடிகர் தவசி

நான் கடவுள், ஜில்லா, வீரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் தவசி(60). இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு நலிந்த கலைஞர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் போது உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.

நடிகை சித்ரா

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28) பலரின் மனம் கவர்ந்த நடிகையாக வலம்வந்தவர். பல அவமானங்களை கடந்து வாழ்க்கையில் படிப்படையாக உயர்ந்து சின்னத்திரையின் முக்கிய நட்சத்திரமாக வலம்வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லையாக நடித்து வந்த இவர் பெயருக்கு ஏற்றார்போல புன்னகை பூத்த சிரிப்புடன் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே விதைத்தவர் எனலாம். சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பலரையும் அதிர வைத்தது. அவரது தற்கொலை வழக்கில் கணவர் ஹேமந்த் ரவி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் தவிர பாலிவுட்டில் நடிகர் இர்ஃபான் கான், நடிகர் ரிஷி கபூர், சுஷாந் சிங் ராஜ்புத்தின் தற்கொலை, நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம், டர்டி பிக்சர்’ பட நடிகை ஆர்யா பானர்ஜி மர்மமான முறையில் உயிரிழப்பு என பல மரண செய்திகள் மீளா துயரையே கொடுத்து விட்டு சென்றுள்ளது எனலாம்.