×

“வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஆபத்து… அனைத்தும் ஆர்பிஐ கையில்?” – எச்சரிக்கும் நிதி ஆலோசகர்!

கொரோனா இரண்டாம் அலை பரவல் உக்கிரமாக உள்ளது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தத் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா வைரஸின் சங்கிலித் தொடரை உடைக்க தற்காலிக தீர்வான முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்திருக்கின்றன. டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் முதல் அலையின்போதே முழு ஊரடங்கு போடப்பட்டதால்
 

கொரோனா இரண்டாம் அலை பரவல் உக்கிரமாக உள்ளது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தத் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா வைரஸின் சங்கிலித் தொடரை உடைக்க தற்காலிக தீர்வான முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்திருக்கின்றன. டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் முதல் அலையின்போதே முழு ஊரடங்கு போடப்பட்டதால் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. மக்களிடையே பணப்புழக்கம் மிகவும் குறைந்தது. ஏற்கெனவே சேமித்து வைத்த பணத்தையே செலவளித்தனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரளவு பொருளாதாரத்தை ஈட்டினார்கள். தற்போது மீண்டும் ஒரு ஊரடங்கு என்பது மக்களின் அடிமடியிலேயே கைவைக்கும் வகையில் பேராபத்தை விளைவிக்கும். மக்களிடம் பணப்புழக்கம் இல்லாவிட்டால் தன்னிச்சையாகவே பொருளாதாரமும் சரிவை நோக்கிச் சென்றுவிடும்.

அதிலும் குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி தொழில் தொடங்கியவர்கள், வாகனங்கள் வாங்கியவர்கள், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் என அனைவருக்கும் மிக மிக நெருக்கடியான சூழல் எழுந்திருக்கிறது. மீண்டும் வருமானத்தை இழக்கும் பட்சத்தில் கடனுக்கான மாதாந்திர தவணை (EMI) கட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குக் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தற்போது இந்தியாவில் ஒருவித அசாதாரண சூழல் உருவாகியிருப்பதாகக் கூறுகிறார் நிதி ஆலோசகர் வடுகநாதன். இதுதொடர்பாக அவர் மேலும் விவரிக்கையில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. இதனால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. பலரது வருமானமும் பாதிக்கப்பட்டது. வருமானம் இல்லாததால் கடன் வாங்கியவர்கள் ஈஎம்ஐ கட்டுவதற்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி விலக்கு அளித்தது (மொரட்டோரியம்). மே மாதத்தைத் தாண்டியும் ஊரடங்கு தொடர்ந்ததால் ஜூன், ஜூலை, ஆகஸ்டு என அடுத்த மூன்று மாதங்களுக்கும் விலக்கு அளித்தது.

ரிசர்வ் வங்கியின் இம்முடிவு நல்ல பலனை அளித்தது. ஏனென்றால் கடன் வாங்கியவர்களில் பலருக்கும் ஈஎம்ஐ கட்ட வேண்டிய அவசியம் எழவில்லை. வங்கிகளும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. இரு தரப்புக்குமே பாதிப்பு ஏற்படாத இம்முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்ததாக மொரட்டோரியத்தை நீட்டிக்காமல் restructure என்ற திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. அதாவது மறுசீரமைப்பு முறை.

உதாரணமாக ஒருவர் 4 ஆண்டுகளுக்கு கடன் பெற்று மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஈஎம்ஐ கட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த மறுசீரமைப்பின் மூலம் அவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தள்ளிப் போடலாம். 4 ஆண்டுகளை 6 ஆண்டுகளாக நீட்டித்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் கட்டினாலேயே போதுமானது. இதனால் வாடிக்கையாளர்களின் பெருமளவு சுமை குறைந்தது. வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அசலும் கடனும் தேடிவந்தது. இரு தரப்புக்குமே சேதாரமில்லாத இந்தத் திட்டம் கொரோனா காலத்தில் நல்ல நிவாரணமாக அமைந்தது எனலாம்.

தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாம் பரவல் மீண்டும் மொரட்டோரியம் அறிவிக்கப்படுவதற்கான அவசியத்தை உணர்த்தியிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துகொண்டே செல்கிறது. வேலையிழந்து சம்பளம் கிடைக்காது போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. வாடிக்கையாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்குமே பாதிப்பு தான்.

இச்சமயத்தில் ரிசர்வ் வங்கி மொரட்டோரியம் கொடுக்காவிட்டால் அவர்கள் வாடிக்கையாளர்களை ஈஎம்ஐ கட்ட சொல்லி நிர்பந்தப்படுத்துவார்கள். வருமானம் இல்லாமல் வாடிக்கையாளர்களும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியோ மௌனம் காக்கிறது. இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு போட்டால் மட்டுமே மொரட்டோரியம் அளிக்கப்படும். தற்போது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன. முழு ஊரடங்கை செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. ஆகவே இச்சமயத்தில் விழித்துக்கொண்டு ரிசர்வ் வங்கி மொரட்டோரியம் வழங்கினால் மட்டுமே வங்கிகளும் அதன் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களும் மிகப்பெரிய பேரிழப்பிலிருந்து மீள்வார்கள்” என்றார்.