×

டெபிட் கார்டா…? கிரெடிட் கார்டா…? எதை எப்போது பயன்படுத்துவது ?

பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள இந்த நாட்களில், உத்தரவாதமான வருமானம் உள்ளவர்களும் செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. தனிநபர் நிதி நிர்வாகத்தில் நன்கு திறமையானவர்கள்கூட, கடந்த 3 மாதங்களில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என வாங்கியவர்கள் அவற்றை திருப்பி செலுத்த திணறுவதாக சொல்கின்றனர். இந்த நேரத்தில் கிரெடிட் கார்டு வேறு… என பலரும் புலம்புகின்றனர். ஆனால் புலம்ப தேவையில்லை, கிரெடிட் கார்டை சரியாக இந்த நாட்களில் பயன்படுத்திக்
 

பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள இந்த நாட்களில், உத்தரவாதமான வருமானம் உள்ளவர்களும் செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. தனிநபர் நிதி நிர்வாகத்தில் நன்கு திறமையானவர்கள்கூட, கடந்த 3 மாதங்களில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என வாங்கியவர்கள் அவற்றை திருப்பி செலுத்த திணறுவதாக சொல்கின்றனர். இந்த நேரத்தில் கிரெடிட் கார்டு வேறு… என பலரும் புலம்புகின்றனர். ஆனால் புலம்ப தேவையில்லை, கிரெடிட் கார்டை சரியாக இந்த நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் பயன்படுத்தியவர்கள்.

“இப்பொழுது வாங்கு.. பிறகு பணத்தைக் கொடு” என்கின்ற நடைமுறையினைக் கிரெடிட் கார்டு வழங்குவதால், அதே பொருளை ரொக்கமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ வாங்கியிருந்தால் அப்பொழுது செலுத்தியிருக்க வேண்டிய தொகை , மற்றும் அதற்கான வட்டி மிச்சமாகிறது.

டெபிட் கார்டு- கிரெடிட் கார்டு , இரண்டுமே பயன்படுத்தும் போதும் ஒன்றுபோலவே இருந்தாலும், இரண்டுக்கும் இடையில் உள்ள நுணுக்கமான வேறுபாடு இதுதான்.

இக்கட்டான நேரத்தில் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்யலாம் என்பதே நமது யோசனையாக இருக்கும். ஆனால், கிரெடிட் கார்டு மூலம் 45 நாட்களுக்கு கிடைக்கும் வட்டியில்லா கடனை நாம் பயன்படுத்துவதில்லை. தவிர சில சலுகைகளையும் கிரெடிட் கார்டுகள் அளிக்கின்றன. இதுதான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான தூண்டுதல்.

ஒவ்வொரு பரிவர்த்தனைகளின் மீதும் கேஷ்பேக், சிறப்புப் புள்ளிகளையும் (Discount and Reward Points) வழங்குகின்றன. நாம் சேர்க்கும் சிறப்புப் புள்ளிகளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படியான ஆபர்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மிக அரிதாகவே வழங்கப்படுகின்றன.

டெபிட் கார்டுகளைக் காட்டிலும் கிரெடிட் கார்டுகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களை, உதவிகள் உள்ளன. கார்டு தொலைந்து அது முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தால், புகார் பதிவு செய்த ஒரு வாரத்துக்குள் இழப்புகளைச் சரிசெய்ய கிரடிட் கார்டு நிறுவனங்கள் முன்வருகின்றன . இந்த பாதுகாப்பு, டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை.

கார்டுகளைப் பயன்படுத்தும் போது நிகழும் தவறுகளால் பரிவர்த்தனைகளில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் டெபிட் கார்டு வாடிக்கையாளரைக் காட்டிலும் கிரடிட் கார்டு வாடிக்கையாளருக்கு விரைவில் தீர்வு கிடைக்கிறது.

கிரடிட் கார்டு பரிவர்த்தனை தொகை அதிகமாக இருந்தால், மாதத்தவணையாகச் (EMI) செலுத்தும் வசதியும் உள்ளது. கிரடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டிவிகிதங்கள் பிற இடங்களில் நாம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களைவிட குறைவுதான். கிரெடிட் கார்டினை முறையாகப் பயன்படுத்தினால், கடன் மேலாண்மைத் திறன் கூடுகிறது என்று சொல்லலாம். இது கிரடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளருடைய கடன் பெறுவதற்கான தகுதியினை அதிகரிக்கிறது.

கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவோருக்கு வீட்டுக்கடன், தனிநபர் கடன் ஆகியவை எளிதாக கிடைக்கும். அதற்கான வட்டியையும் குறைத்து பேசமுடியும்.

கிரெடிட் கார்டின் கடன் தொகையினை, ஒவ்வொரு முறையும் தவறாமல் செலுத்த முடியும் என்னும் நிலையிலிருந்தால் டெபிட் கார்டைக் காட்டிலும் கிரெடிட் கார்டுதான் அதிகப் பயன் அளிக்கும். ஆனால் இந்த விஷயம் இப்போது நமது பணநிலை மட்டுமல்ல, மனநிலையை பொறுத்தும் முடிவு செய்ய வேண்டியது.

-தமிழ் தீபன்