×

நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்... நிச்சயம் பணக்காரராக முடியும் - ஆனால் எப்படி?

 

இந்தியாவிலுள்ள பெரிய பெரிய நகரங்கள் ஓர் நாள் இரவில் கட்டமைக்கப்பட்டதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகவே சிறப்பான பலன் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் பிடிக்கும். அதை நாம் உணர வேண்டும். ஆனால் இன்றைய அவசர உலகில் அனைத்துமே மிக விரைவாக கிடைக்க வேண்டும் என நம்முடைய மனம் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. 20 வருடத்திற்கு பின்னர் கிடைக்கக் கூடிய நன்மைகளை நாம் சிந்திக்க எளிதாக மறந்துவிட்டோம். இதைச் சிந்தித்தால் அவசரம் அவசரமாக முதலீடு செய்ய நாம் தூண்டப்பட மாட்டோம். சேமிப்பை விட முதலீடு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். 

பங்குச்சந்தை ஆபத்தானதா?

ஆனால் எப்படி முதலீடு செய்வது என்ற அடிப்படையை நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. இது தான் நாம் சறுக்கும் இடம். நம்மிடம் முறையான திட்டமிடல் இல்லை. இதனால் தான் பங்குச்சந்தை போன்ற முதலீடுகளைக் கண்டு அஞ்சி நடுங்கி மிகப்பெரும் லாபம் ஈட்டிக்கொடுக்கும் விஷயத்தை ஆரம்பக் கட்டத்திலேயே கிள்ளி எறிகிறோம். பங்குச்சந்தைகள் குறுகிய காலத்தில் நிலையற்றவையாக இருக்கலாம். ஆனால் அவை காலப்போக்கில் மெல்ல மெல்ல மேல்நோக்கி எழும். நீங்கள் வாங்கிய நம்பிக்கையான ஸ்டாக் சர்ரென்று கீழே இறங்கலாம். ஆனால் அது மேலே ஏறுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். கோட்டையைக் கட்ட பல மணி நேரங்களாகும்; இடிக்க சில மணி நேரங்கள் போதும் அல்லவா? அதுபோல தான் பங்குச்சந்தை விலையேற்ற இறக்கங்களும். 

பங்குச்சந்தை எனும் ரோலர்-கோஸ்டர்

ஆகவே 25 வருடங்களாக நீங்கள் எதையும் செய்யாமல் இருந்தால் நிச்சயம் நீங்கள் பணக்காரராக முடியும். அதற்கு நீங்கள் முதலில் முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து செய்ய வேண்டும். 2 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்கள் 2 வருடங்களுக்குப் பிறகு முதலீட்டை தொடர்வதில்லை என்கிறது ஒரு தரவு. ஏன்? எதனால்? காரணம் உணர்ச்சிகளை நிர்வகிக்க தெரியாமல், அது சொல்லும் திசையில் பயணிப்பதே. முதலீட்டின் பயணம் ஒரு ரோலர்-காஸ்டரை போன்றது. மேலும் கீழும் பக்கவாட்டிலும் பின்னோக்கியும் அந்த ரோலர்-கோஸ்டர் சுழலும். அதுபோல தான் பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடும். சந்தை உயரும் அளவுக்கேற்ப முதலீட்டாளர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். 

நம்முடைய உணர்வுகளை நமக்கு எதிரி

உங்களைச் சுற்றி அனைவரும் பணம் சம்பாதிப்பதாக தோன்றும். உங்கள் முதலீடு குறைவான வீழ்ச்சி கண்டாலும் பெருமளவு வீழ்ச்சியானது போலவும் தோன்றும். நம்முடைய பணத்தை இழப்பது தான் உலகில் வேறு எதையும் விட நாம் அதிகமாக வெறுக்கும் விஷயம். 5-10% வீழ்ச்சியடைந்தால் நம்மால் சந்தையைக் கையாள முடியும். அதேபோல 20% வீழ்ச்சி கண்டாலும் நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அதைக் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். உணர்ச்சிவயப்பட்டவர்கள் அதற்கு எப்படி தயாராக வேண்டும்? சந்தைகள் வீழ்ச்சி காணும்போது உங்கள் பணத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் கவலை, அச்சம், அதிர்ச்சி, பீதி என கலந்துகட்டிய உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும். 

இந்த உணர்வுகளை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களின் வருமானத்தை தீர்மானிக்க முடியும். இம்மாதிரியான சூழல்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக ரியாக்ட் செய்வார்கள். பலர் அச்சப்பட்டு போட்ட பணத்தையாவது எடுத்துவிட வேண்டும் என அவசரம் அவசரமாக விலகுவார்கள். இன்னும் சிலரோ எதுவுமே நடக்காதது போல ஜென் நிலையில் இருப்பார்கள். இந்த காலங்களில் நம்முடைய அனுபவம், சந்தை பற்றிய அறிவு, நம்முடைய திட்டத்தின் மீதான நம்பிக்கை என அனைத்தும் நம்மை விட்டு அகலலாம். ஆனால் இதையெல்லாம் சாதிக்க தேவை திடக்காத்திரமான மன உறுதி.  


இம்மாதிரியான இருண்ட காலங்களில் கூட நம்மால் சாதிக்க முடியுமா?

நிச்சயம் முடியும். இந்த காலக்கட்டத்தில் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் தங்களுடைய ஆலோசகர்களின் அறிவுரைகளை மதித்து செயல்படுகிறார்கள். அதனை முறைப்படி பின்பற்றுகிறார்கள். அதனால் அவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இதை நீங்களும் பின்பற்றலாம். இது ஒரு வழி. மற்றொரு வழி எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சந்தைகளின் வீழ்ச்சியை சில நாட்கள் மறக்கலாம். அடிக்கடி மார்க்கெட் நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல் இருக்கலாம். வெளியில் என்ன நடக்கிறது என்பது தெரியவிட்டால், உங்களின் முதலீட்டு வாய்ப்பை நிலையாக வைத்திருக்கும் மனநிலை மாறும். 

தகவல் சேகரிப்பு எனும் இருமுனை கூர்வாள்

இம்முடிவு நீண்ட காலத்திற்குப் பின் பணம் சம்பாதித்து கொடுக்கும். தகவல் சேகரிப்பு என்பது இரு முனை கொண்ட கூர்வாள். ஆகவே கூடியமட்டும் அதைத் தெரிந்துகொள்ள முற்படாதீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வருமுன் காப்போம் விதிப்படி, ரிஸ்க்குகளை முன்கூட்டியே அறிந்து, அது வந்தால் எப்படி செயல்பட வேண்டும் என திட்டமிட வேண்டும். சந்தையின் நிகழ்தகவுகள், பழைய டேட்டாக்கள் ஆகியவை பிரச்சினையின் வேர்களை அறிய உதவுகிறது. இவற்றைக் கொண்டு நம்முடைய உணர்ச்சிகளுக்கேற்ப முடிவெடுப்பதை தடுக்க முடியும். 

முடிவு தான் என்ன?

முடிவாக சொல்லவருவது இதுதான்... நீண்ட கால முதலீடு என்பது விலையுயர்ந்த விளையாட்டு. நிலையான செல்வத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான விசயம் இல்லை. இதற்கு நேரம் தான் நம்முடைய மற்றொரு முதலீடு. அதேபோல வலிமையான மனம் வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையின் மதிப்புமிக்க சொத்து நேரம் மட்டுமே. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான் இன்றைய வெற்றிகரமான முதலீட்டாளர்களின் அடையாளமாகும். இதில் இளைஞர்களுக்கு இருக்கும் சவால் என்னவென்றால் அவர்கள் பணத்தை விரும்புகிறோம், ஆனால் பணம் திரும்ப அவர்களை நேசிப்பதில்லை. 

பொறுமையோ பொறுமை...

இதை உணர மறுக்கிறார்கள். அந்த பணத்திற்கு உணர்வுகளோ உணர்ச்சிகளோ இல்லை. நீங்கள் அதற்காக முயன்றால் மட்டுமே உங்களை அது வந்தடையும். இல்லையெனில் எப்போதுமே உங்களிடம் வராது. முதலீடு செய்வதற்கான அவசரம் இருக்க வேண்டும் தான், ஆனால்  முதலீட்டாளர்கள் தங்களைத் தாங்களே அதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே பணக்காரராவதற்கான சாரம்சம். முதலீடு, நேரம், பொறுமையாக இருப்பது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது இதைச் சரியாக செய்யும் எவராலும் நிச்சயம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பணக்காரராக முடியும்.