×

ரூ.5-ரூ.20 வரை குறைந்த சமையல் எண்ணெய் விலை... மத்திய அரசு பெருமிதம்!

 

இந்தியாவில் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் விலை ஒரு பக்கம் ஏறிக் கொண்டிருந்தது. அதேவேளையில் சத்தமின்றி சமையல் எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் சாமான்ய மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களால் உணவு சமைக்க தேவையான பாமாயில் வாங்க கூட முடியாமல் தவித்தனர். ஹோட்டல்களிலும் உணவுகளின் விலையும் அதிகரித்தது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. 

இதனால் மத்திய அரசு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்தியாவில் மட்டுமில்லாமல், பல்வேறு உலக நாடுகளிலும் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கவே செய்தன. இருந்தாலும் இந்தியாவில் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களும் கோரிக்கை விடுத்தன. அதன் விளைவாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எண்ணெய் பொருட்கள் மீதான வரியைக் குறைத்தது. அதன் விளைவாக பல்வேறு எண்ணெய் நிறுவனங்களும் விலையைக் குறைத்தன.

இதனால் கடைகளில் சில்லறையாக கிடைக்கும் எண்ணெய்களில் விலையிம் கணிசமாக குறைந்தது. கடந்த 11ஆம் தேதி நிலவரப்படி இந்தியளவில் கடலை எண்ணெய்யின் சராசரி சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.180ஆகவும், கடுகு எண்ணெய் கிலோ ரூ.184.59 ஆகவும், சோயா எண்ணெய் கிலோ ஒன்றுக்கு ரூ.148.85ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் கிலோ ஒன்றுக்கு ரூ.162.4 ஆகவும், பாமாயில் விலை ரூ.128.5 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் நிலவிய விலையுடன் ஒப்பிடும் போது, எண்ணெய்களின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.1.50-3 குறைந்துள்ளது.

அதே நேரத்தில் சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களின் விலை இப்போது கிலோவுக்கு ரூ.7-8 குறைந்துள்ளது. இதனை மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனைச் சந்தைகளில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 5-20 என்ற அளவில் கணிசமாகக் குறைந்துள்ளன. அதானி வில்மர் மற்றும் ருச்சி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 15-20 ரூபாய் வரை விலையைக் குறைத்ததே இதற்குக் காரணம் என அந்த அமைச்சகம் கூறியுள்ளது.