×

விற்பனையில் சறுக்கலை சந்தித்த ஹீரோ, தூள் கிளப்பிய டி.வி.எஸ். மற்றும் அசோக் லேலண்ட்

 

கடந்த ஜூலை மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது. அதேசமயம், டி.வி.எஸ். மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 3.91 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 ஜூலை மாதத்தை காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 4.45 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி 2023 ஜூலை மாதத்தில் மொத்தம் 3.25 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். 2022 ஜூலை மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மொத்தம் 3.14 லட்சம் வாகனங்களை விற்பனை  செய்து இருந்தது.

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற மாதத்தில் மொத்தம் 15,068 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 ஜூலை மாதத்தைக் காட்டிலும்  11 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 13,625 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.