×

வர்த்தக துளிகள்.. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.. மத்திய அமைச்சர் தகவல்
 

 

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமும், ஐ போன் தயாரிப்பு நிறுவனமுமான ஆப்பிள், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியாவின் முயற்சியால் தான் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவிலிருந்து தினமும் சராசரியாக 16 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் நம் நாடு இறக்குமதி செய்துள்ளது. இது 2023 ஜனவரி மாதத்தை காட்டிலும் 28 சதவீதம் அதிகமாகும். மேலும், நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம்  ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் மொத்த பங்களிப்பு 43 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக குறைந்துள்ளது.

நம் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 12 சதவீதம் மற்றும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. விரிவடைந்து வரும் பொருளாதாரத்தில் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கம் அதிகரித்தன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் சமையல் கியாஸ் விற்பனை 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

2023 பிப்ரவரியில் நாட்டின் மின்சார பயன்பாடு 9 சதவீதம் அதிகரித்து 11,784 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. மின்சார பயன்பாடு அதிகரித்து இருப்பது, அந்த மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்ச்சியான வேகத்தை குறிக்கிறது என கூறப்படுகிறது. வெப்பநிலை உயர்வு மற்றும் பொருளாதார நடவடிக்கைளில் மேலும் முன்னேற்றம் போன்ற காரணங்களால் நடப்பு மார்ச் மாதத்தில் மின் பயன்பாடு மற்றும் மின் தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2022 ஜனவரியில் நாட்டின் மின்சார பயன்பாடு  10,381 கோடி யூனிட்களாக இருந்தது.