×

வர்த்தக துளிகள்.. 3 லட்சம் வாகனங்களை ரயில் மூலம் பிற பகுதிகளுக்கு அனுப்பிய மாருதி சுசுகி

 

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2022ம் ஆண்டில் மொத்தம் 3.2 லட்சம் வாகனங்களை இந்திய ரயில்வே மூலம் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றது. இது மாருதி சுசுகி இந்தியா நிறுவனம்  ரயில்வே வாயிலாக ஒராண்டில் வாகனங்களை பிற பகுதிகளுக்கு கொண்டு சென்ற அதிகபட்ச அளவாகும். வாகனங்களை பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கான நிறுவனத்திற்கான போக்குவரத்தில் ரயிலின் பங்கு 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கிரிசில் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் மற்றும் அனலிடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மின்சார பயன்பாடு 9  முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுவது மற்றும் ஆரோக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இந்த நிதியாண்டில் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என கணித்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமம் 2022 ஜனவரியில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்டது. அது முதல் ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்றுவதை இலக்காக கொண்டு செயல்படுகிறது. தற்போது விமான போக்குவரத்து துறையான கோவிட் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால், ஏா் இந்தியா தனது விமான சேவைகளின் விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக, சுமார் 500 விமானங்களை வாங்குவதற்கு ஒரு பெரிய ஆர்டரை வழங்க உள்ளதாக தகவல்.

நடப்பு பருவத்தில் இதுவரை (2022 அக்டோபர் 1 முதல் ஜனவரி 15) இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 1.57 கோடி டன்னை எட்டியுள்ளது. இது சென்ற பருவத்தின் இதே காலத்தை காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். நாட்டில் அதிகமான ஆலைகள் செயல்பாடு அதிகரித்ததே இதற்கு காரணம். கடந்த பருவத்தின் இதே காலத்தில் 1.51 கோடி டன் அளவுக்கே சர்க்கரை உற்பத்தியாகி இருந்தது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.