×

வர்த்தக துளிகள்... விருப்ப ஓய்வு திட்டத்துக்கு ஓ.கே. சொன்ன 4,500 ஏர் இந்தியா பணியாளர்கள்..

 

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியபோது, அந்நிறுவனத்தில் மொத்தம் 13 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர். இதில் 8 ஆயிரம் பேர் நிரந்த பணியாளர்கள் எஞ்சியவர்கள் ஒப்பந்த பணியாளர்கள். இந்நிலையில் டாடா குழுமத்தின் தலைமையிலான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது மேலும், இந்த திட்டத்துக்கான தகுதி வயதையும் 55-லிருந்து 40ஆக குறைத்தது. தற்போது சுமார் 4,500 ஏர் இந்தியா பணியாளர்கள் விருப்பு ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் தலைமையிலான  ஆகாசா ஏர்  விமான சேவை நிறுவனம், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டி.ஜி.சி.ஏ.) ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (விமான சேவை செயல்பாடுகளை தொடங்க) பெற்றுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி முதல் மும்பை-அகமதாபாத் மற்றும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் வாராந்திர விமானங்களை இயக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இம்மாதம் 28ம் தேதி தொடங்குகிறது என ஆகாசா ஏர் தெரிவித்துள்ளது.

பொதுவாக ரூபாய் மதிப்பு சரிவடைந்தால், இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும். தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் கலிபோர்னியா பாதாம், வாஷிங்டன் ஆப்பிள்,  இறக்குமதி செய்யப்பட்ட செர்ரி, கிவி மற்றும் பெர்ரி ஆகியவற்றின் விலைகள் ரூபாய் மதிப்பு சரிவால் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதனால் கோவிட்-19ன் இரண்டாவது அலைக்கு பிறகு அதிகரித்த உள்நாட்டு தேவை பாதிக்கப்படுகிறது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: கடந்த 2021-22ம் நிதியாண்டில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இரு சக்கர  மற்றும் பயணிகள் வாகனங்கள் உள்பட மொத்தம் 13 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்ப பெற்றுள்ளன. இதில் 8.64 இரு சக்கர வாகனங்களும், 4.67 லட்சம் பயணிகள் வாகனங்களும் அடங்கும். இது 3 ஆண்டுகளில் இல்லாத அதிக அளவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.