×

வர்த்தக துளிகள்... பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்பு..

 

கடந்த மே 22ம் தேதியன்று மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (லிட்டருக்கு) முறையை ரூ.8 மற்றும் ரூ.6 குறைத்தது. அதன் பிறகு கடந்த 5 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 வரை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல். கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பு தற்போதுள்ள நிலையில் வைத்திருந்தால், எரிபொருள் விலையில் ரூ.2 ரூபாய் வரை குறைவதை காணலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனமான கேப்ஜெமினி, நம் நாட்டில் தனது நிறுவனத்துக்கு பணியாளர்களை தீவிரமாக பணியமர்த்தி வருகிறது. கேப்ஜெமினி நிறுவனம் கடந்த ஒரு ஆ்ண்டில் மட்டும் 35 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. இதனையடுத்து நம் நாட்டில் கேப்ஜெமினி நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 1.85 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் கேப்ஜெமினி நிறுவனம் சுமார் 50 ஆயிரம் பேர் வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வரி செலுத்துவோருக்கும் பொதுவான வருமான வரி தாக்கல் (ஐ.டி.ஆர்.) படிவத்தை அறிமுகம் செய்ய வருமான வரித்துறை முன்மொழிந்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள வரைவு முன்மொழிவின்படி, வருமான வரி செலுத்துவோர் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது, முன்மொழியப்பட்ட பொதுவான ஐ.டி.ஆர். படிவம் அல்லது ஏற்கனவே உள்ள படிவத்தை (ஐ.டி.ஆர். 1 அல்லது ஐ.டி.ஆர். 4) தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை பெறுவார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா இந்திய ரிசர்வ் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2025-26ம் நிதியாண்டுக்குள் இந்தியா, ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை தாண்டி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும். 2027ம் ஆண்டுக்குள் பொருளாதார பலத்தில் இந்தியாவை ஜப்பானை முந்தி விடும். உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்டா நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த ஆண்டில் உலகிலேயே மிகப்பெரியதாகவும், இளையதாகவும் (இளைஞர்கள் அதிகம்) மாறும். இது உலகின் சிறந்த நிதி இடைநிலை சேவைகளுக்கான தேவையை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.