×

வர்த்தக துளிகள்... புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தல் காரணமாக எகிறும் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு செலவினம் 

 

2023 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தற்போதைய உற்பத்தி நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேகத்தை வைத்து பார்க்கும்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்ட 75 ரயில்களை இயக்குவது என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சில புதிய தொழில்நுட்பம்  மற்றும் மேம்படுத்தல் பணிகள் காரணமாக 16 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயிலின் கட்டுமான செலவு தற்போது ரூ.120 கோடியை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் கட்டமைக்க ரூ.106 கோடி செலவானது.

பணிநீக்கம் என்பது அமேசான், டிவிட்டர், மெட்டா, சிஸ்கோ மற்றும் கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ட நிறுவனங்களில் தற்போது சர்வசாதரணமாக நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிலையில், டாடா குழுமம் தனது துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் மூலம்  செல்ப் டிரைவிங், மின்மயமாக்கல், எந்திரகற்றல் மற்றும் டேட்டா சியன்ஸ் ஆகிய பிரிவுகளில் 800 பணியிடங்களில், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து வெளியேறிய தொழில்நுட்ப பணியாளர்களை பணியமர்த்துவதாக கூறியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு ஆதரவாக டாடா குழுமம் வருவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒரு வாடிக்கையாளர் வாயிலான மாதந்திர சராசரி வருவாய் ரூ.127.17லிருந்து ரூ.133.55ஆக உயர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 17.91 சதவீதம் அதிகரித்து ரூ.60,530 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.51,335 கோடியாக இருந்தது. தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் சரிசெய்யபட்ட மொத்த வருவாய் அடிப்படையில் தனது பங்கு வருவாயை மத்திய அரசு பெறுகிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய என்ஜினியரிங் மற்றும் மேனுபாக்சரிங்  நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் மத்திய அரசுக்கு 2021-22ம் நிதியாண்டுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.88 கோடி வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கான வருவாய் ஆதாரங்களில் முக்கியமானது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.