போலி டோக்கனை கொடுத்து மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்த அமமுகவினர்

 

போலி டோக்கனை கொடுத்து மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்த அமமுகவினர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில் பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து அதில், 2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கிகொள்ள சொல்வதாக தெரிவித்தனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் சேக் முகமது, நான் யாருக்கும் டோக்கனிற்கு மளிகை பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கூட்டம் கூட்டமாக மக்கள் வரவே தனக்கும் டோக்கனிற்கும் சம்பந்தமில்லை என பிரிண்ட் எடுத்து கதவில் ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகே அப்பகுதி மக்களுக்கு அது போலி டோக்கன் என்பது தெரியவந்தது.

போலி டோக்கனை கொடுத்து மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்த அமமுகவினர்

இது குறித்து கடையின் உரிமையாளர் சேக்முகமது கூறுகையில், “நான் கடந்த 25 வருடமாக இங்க கடை நடத்தி வருகிறேன். ஆனால் யாரோ ஒரு வேட்பாளர் வாக்காளர்களுக்கு டோக்கனை கொடுத்து உள்ளார். அந்த டோக்கனை காட்டி பொதுமக்கள் பொருட்களை கேட்கின்றனர். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நான் அதிமுகவில் இருக்கிறேன்” என தெரிவித்தார். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், டோக்கன் விவகாரம் தொடர்பாக புகார் வந்திருப்பதாகவும், மாவட்ட எஸ்பியிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், கும்பகோணம் தொகுதி அமமுக வேட்பாளர் பாலமுருகன்தான் டோக்கன் கொடுத்தது உண்மைதான் ஆனால், அதற்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறவில்லை, வெள்ளிக்கிழமை பணம் தருவதாகதான் கூறினோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்