தேர்வின்றி தேர்ச்சி பெற வைப்பதை ஏற்க முடியாது: வெளியானது ஏஐசிடிஇயின் கடிதம்

 

தேர்வின்றி தேர்ச்சி பெற வைப்பதை ஏற்க முடியாது: வெளியானது ஏஐசிடிஇயின் கடிதம்

அரியர் வைத்திருக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற வைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்த ஏஐசிடிஇயின் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை தவிர பிற ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதே போல கட்டணம் செலுத்தி அரியர் தேர்வுக்காக காத்திருந்த மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பி.இ மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என ஏஐசிடிஇ கடிதம் எழுதியதாக கூறினார்.

தேர்வின்றி தேர்ச்சி பெற வைப்பதை ஏற்க முடியாது: வெளியானது ஏஐசிடிஇயின் கடிதம்

இதற்கு மறுப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஏஐசிடிஇயின் கடிதம் எதுவும் அரசுக்கு வரவில்லை என்றும் துணைவேந்தர் சூரப்பா ஏஐசிடிஇக்கு என்ன பதில் கடிதம் எழுதினார் என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் சூரப்பா, தனக்கு ஏஐசிடிஇ அனுப்பிய கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அந்த கடிதத்தில், அரியர்ஸ் வைத்துள்ள இறுதியாண்டு மாணவர்களை தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற வைப்பதை ஏற்க முடியாது என்றும் தேர்வின்றி தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி, நிறுவனங்களில் சேர தகுதியற்றவர்கள் என்றும் இந்த உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரம் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதம் தொடர்பாக அரசு ஆலோசனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.