நான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி!

 

நான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜவர் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது முதல் அதிமுகவில் புதிய பதவிகளைப் பிடிக்க கடும் போட்டி நிலவத் தொடங்கிவிட்டது. இந்தத் தடவை வாய்ப்பை நழுவவிட்டால் நம்முடைய அரசியல் எதிர்காலமே சூன்யமாகிவிடும் என கருதுபவர்கள் தங்களுக்குத் தெரிந்த சேனல் மூலம் கட்சித் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

ஜவர் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்க மணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட்டதாக தகவல் வெளியாகின. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுக்குப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவி மட்டும் கைக்கு வந்துவிட்டால் அமைச்சரைக்கூட ஆட்டிப்படைக்கலாம். அதனால் மாவட்டச் செயலாளர் பதவியை பெற முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் முட்டி மோதிவருகின்றனர்.

நான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி!

தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் சசிகலா ஆசியோடு ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் ஸ்டைலே சசிகலா மூலமாகவும் உளவுத்துறை மூலமாகவும்தான் கட்சியினருக்கு பதவிகள் வழங்கப்படும். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு இரட்டை தலைமையில் கட்சி செயல்பட்டுவருகிறது. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துதான் கட்சியையும் ஆட்சியையும் நடத்திவருகின்றனர். அதனால் கட்சி பதவிக்கான ரேஸில் நிற்பவர்கள் இருவரிடமும் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்துவருகின்றனர்.

நான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி!

தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினரை திருப்திபடுத்தவும் உற்சாகமாக அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் பணியாற்றவும் வழிவகுக்கும் வகையில்தான் புதிய மா.செ பதவி மற்றும் பகுதி செயலாளர் பதவி வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதுத்தவிர கட்சியில் உள்ள இதர அமைப்புகளையும் பலப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் எப்படியோ அப்படிதான் அதிமுகவுக்கு சுனில் என்பவர் இருக்கிறார். அவரின் தேர்தல் வியூகம், புதிய மாவட்டச் செயலாளர் பணியிடங்கள், கட்சியினருக்கு புதிய பதவிகள், அதிருப்தியாளர்களை திருப்திபடுத்தும் வழி என பெரிய லிஸ்ட்டே போட்டு கொடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை தொடங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் ஐவர் குழுவினர் ஆலோசனை நடந்துவருகிறது.

இந்தக் குழுவோ, கட்சித் தலைமையோ அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கட்சிக்குள் புதிய பதவிகளை பெற ஒவ்வொருவரும் போட்டி போடத் தொடங்கிவிட்டனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மாஃபா என்றழைக்கப்படும் பாண்டியராஜனும், பெஞ்சமினும் மாவட்டச் செயலாளர் பதவியை பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலா தலைமையில் கட்சி செயல்பட்டது. அப்போது சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கி ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தத்தை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவருக்கு ஆதரவளித்ததால் அமைச்சர் பதவியை துறந்தவர் பாண்டியராஜன். அதன்பிறகு சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார். அதனால் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

நான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி!

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின. ஆவடி தொகுதியில் மாஃபாவுக்கு எதிராக செயல்பட்டவர்களையும் அவர் அரவணைத்து செல்கிறார். ஆனால் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை ஒரு டீம் எப்போதுமே கட்சிக்குள் செய்துவருகிறது. தற்போது மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதில் அமைச்சர்கள் இருவருக்கும் இடையே கடும் முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று ஆரம்பகட்டத்தில் இருந்தபோது அமைச்சர்கள் மாஃபா-வும் பெஞ்சமினும் மாவட்டம் முழுவதும் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கட்சித் தலைமை தெரிவித்தது. ஆனால் மாஃபா மட்டும் தனி நபராக ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் என சென்றார். ஆனால் அதற்கும் சிலர் முட்டுகட்டை போட்டுவிட்டனர்.

ஆவடி தொகுதியில் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்த அமைச்சர் மாஃபா, ஆவடி மக்களின் நீண்ட நாள் கனவான ஐடி பார்க்கிற்கு அடிக்கல்லையும் நாட்டினார். ஆனால் அந்தப்பணிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து இடையூறுகள் வந்தன. பருத்திப்பட்டு ஏரியில் பசுமை பூங்கா அமைத்தது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா தடுப்பு பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் சென்னையில் அதிக கொரோனா தொற்று உள்ள தண்டையார்பேட்டைக்கு பொறுப்பாளராக மாஃபா நியமிக்கப்பட்டார். அதனால் ஆவடி தொகுதியையும் சென்னை பொறுப்பையும் சிறப்பாக கவனித்து வரும் மாஃபாவுக்கு நிச்சயம் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என அவரின் ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.

Over ₹5,541 crore GIM investments have fructified in MSME sector ...
அதைப்போல அமைச்சர் பெஞ்சமினும் இந்தத் தடவை மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று செயல்பட்டுவருகிறார். ஏற்கெனவே ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்த அமைச்சர் பெஞ்சமினுக்கு அடுத்தடுத்து பதவிகள் கிடைத்தன. இதற்கெல்லாம் வானகரத்தில் நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை அமைச்சர் பெஞ்சமின் சிறப்பாக ஏற்பாடு செய்ததே காரணம். துணை மேயர் பதவியிலிருந்து அமைச்சரவையும் இடம் பிடித்த பெஞ்சமின் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறார். கொரோனா தடுப்பு பணியிலும் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு கட்சியின் தலைமையிடத்திலும் செல்வாக்கு உள்ளது. அதனால் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என அமைச்சர் பெஞ்சமின் தரப்பும் ஆவலுடன் இருந்துவருகிறது.

நான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி!

ஒரே மாவட்டத்தில் அமைச்சர்கள் பெஞ்சமினுக்கும் பாண்டியராஜனுக்கும் இடையே மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2 அல்லது 3 சட்ட மன்றங்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கட்சித் தலைமை முடிவெடுத்தால் தற்போது மாவட்டச் செயலாளர்களான அலெக்ஸாண்டர், சிறுணியம் பலராமன் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்த மாதவரம் மூர்த்தி, ரமணா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. தற்போது அவர்களும் மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கான போட்டி ரேஸில் உள்ளனர்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் மாவட்டச் செயலாளர் பதவியில் இல்லை. புதிய மாவட்ட செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதால் அந்தப் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற முணைப்போடு ஒரு டீம் செயல்பட்டு வருகிறது. குற்றச்சாட்டுக்களில் சிக்கி ஜெயலலிதாவால் பதவிகள் பறிக்கப்பட்டவர்களும் எப்படியாவது மாவட்டச் செயலாளராகிவிட்டால் அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டை பெற்றுவிடலாம் என்ற கணக்கில் காயை நகர்த்திவருகின்றனர். திருத்தணியை பொறுத்தவரை கோ.அரி, மாவட்டச் செயலாளர் பதவி அல்லது எம்.எல்.ஏ சீட் என்ற கணக்கில் செயல்பட்டுவருகிறார். ஏற்கெனவே முட்டல் மோதலாக இருந்த மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர் பதவி புதிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

கட்சிக்குள் நடந்துவரும் இந்த முட்டல் மோதல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆவடி அரசியலை பொறுத்தவரை அதிமுக, திமுக என கட்சிபாகுபாடில்லாமல் ஒருங்கிணைந்து கட்சியினர் செயல்பட்டுவருகின்றனர். அதனால் பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகள்கூட சரியாக செய்து கொடுப்படுவதில்லை. அதை எதிர்கட்சிகளும் தட்டிக்கேட்பதில்லை என்ற மனக்குமுறலில் பொதுமக்கள் உள்ளனர். இதே நிலைதான் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளன. மாவட்டச் செயலாளர் பதவியைப் போல பகுதி செயலாளர் பதவியும் பிரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஐவர் குழு ஆலோசனைக்குப்பிறகு கட்சித் தலைமை புதிய பதவிகள் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-நமது நிருபர்