ஓடிடியில் பொன்மகள் வந்தாள்: திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை! மாற்றுவழியை நோக்கி மட்டுமே நகர்ந்தோம்: நடிகர் சூர்யா

 

ஓடிடியில் பொன்மகள் வந்தாள்: திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை! மாற்றுவழியை நோக்கி மட்டுமே நகர்ந்தோம்: நடிகர் சூர்யா

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. இதனிடையே இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் இனி 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என போர்கொடி உயர்த்தினர். பலரின் எதிர்ப்பையும் மீறி ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவது ஏன் என்பது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக ஜூம் செயலி மூலம் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே மாற்று வழியை நோக்கி நகர்வது மிகவும் அவசியம். மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல. திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது. ஊரடங்கு முடிவுக்கு வந்து தியேட்டர்கள் எப்போது திறக்கும், படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும், சினிமா துறைகள் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதை உறுதியாக கூறமுடியாது. இந்த நிலை மாற குறைந்தது 2 மாதங்களாவது ஆகும். அதனால் தான் இந்த முடிவு எடுத்தோம்” என தெளிவுப்படுத்தியுள்ளார்.