99.3 சதவீத பணமதிப்பிழப்பு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ஆர்பிஐ

 

99.3 சதவீத பணமதிப்பிழப்பு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ஆர்பிஐ

மும்பை: புழக்கத்தில் இருந்த 99.3 சதவீத பணமதிப்பிழப்பு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கான வழிகள் சிலவற்றையும் அறிவித்த மத்திய அரசு, நோட்டுகளை மாற்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது. அதன்படி, பொதுமக்கள் தங்களிடம் இருந்த செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாற்றினர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் 201718ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புழக்கத்தில் இருந்த ரூ.15.41 லட்சம் கோடி, ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில், ரூ.15.31 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்தில் இருந்த 99.3 சதவீத பணமதிப்பிழப்பு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன எனவும், ரூ.13,000 கோடி திரும்பவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தனது ஆண்டு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.