‘96’ பட தயாரிப்பாளருக்கு ‘ரெட் கார்ட்’ போட்டு நடிகர் சங்கம் அதிரடி!

 

‘96’ பட தயாரிப்பாளருக்கு ‘ரெட் கார்ட்’ போட்டு நடிகர் சங்கம் அதிரடி!

‘96’ பட தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் இனி நடிக்கக் கூடாது என நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை: ‘96’ பட தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் இனி நடிக்கக் கூடாது என நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்டு வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 5 வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தக்குமார் விஷால் நடித்த ‘துப்பாறிவாளன்’, விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ உள்ளிட்ட படங்களில் நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே நிலை விஜய் சேதுபதிக்கும் ஏற்பட்டது. இது தொடர்பாக பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் தயாரிப்பாளர் நந்தக்குமார் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தக்குமார் தயாரித்த படங்கள் ரிலீசின் போது சிக்கல்களை சந்தித்த போது, சம்பளத்தை எதிர்ப்பார்க்காமல் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்கு நடிகர்கள் உதவி வருகின்றனர். நடிகர்களின் இந்த உதவியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்த தயாரிப்பு நிறுவனம் நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமலேயே படங்களை வெளியிட்டு வருகிறது.

இதனை தொடர்ச்சியாக செய்து வரும் தயாரிப்பாளர் நந்தக்குமாரின் ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும், படங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் எந்த ஒத்துழைப்பும் நல்க வேண்டாம்என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.