கொரோனா நிவாரண நிதிக்கு, உண்டியல் சேமிப்பை வழங்கிய ஈரோடு சிறுமி!

 

கொரோனா நிவாரண நிதிக்கு, உண்டியல் சேமிப்பை வழங்கிய ஈரோடு சிறுமி!

ஈரோடு

ஈரோட்டை சேர்ந்த 8 வயது சிறுமி தன்ஷிகா, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை, ஆட்சியரிடம் நேரில் வழங்கினார்.

ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கம்யூட்டர் டிசைனிங் பணி செய்து வருகிறார். இவருடைய 8 வயதான மூத்த மகள் தன்ஷிகா, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தந்தை சண்முகவேல் தரும் பணத்தை, கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்து வந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று, சிறுமி தன்ஷிகா, தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தார்.

கொரோனா நிவாரண நிதிக்கு, உண்டியல் சேமிப்பை வழங்கிய ஈரோடு சிறுமி!

இதனையடுத்து, நேற்று தந்தை சண்முகவேலு உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு வந்த தன்ஷிகா, அங்கு ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தனது 1 வருட சேமிப்பு பணம் சுமார் ரூ.2,500-ஐ வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கதிரவன், சிறுமி தன்ஷிகாவை பாராட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தன்ஷிகா, பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்றும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அரசு சொல்வதை பொதுமக்கள் கேட்க வேண்டும் எனவும் கூறினார்.