8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் இல்லை: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

 

8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் இல்லை: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது

புதுடெல்லி: பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அதனால் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அவை மக்களவையில்  நிறைவேற்றப்பட்டதால் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதும் சட்டமாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது. அதன்படி இந்தத் திருத்த சட்டமானது,  8-ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் ஃபெயில் என அறிவித்துப் படித்த வகுப்பிலேயே மீண்டும் படிக்க வைக்கும் முறை இல்லை. 

ஆனால், இந்த சட்டப்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு ஒன்று வழங்கப்படும். அதிலும் தேர்ச்சி அடையாவிட்டால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.