திண்டுக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களை விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களை விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை விசாரிக்க 7 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி., ரவளி பிரியா உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் பலர், தங்களது நிலம், வீடு உள்ளிட்டவற்றை அடகு வைத்து கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெற்றுள்ளனர். அவர்களில் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் பலரும் தங்களது நிலங்களையும், வீடுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் அளித்தும், போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். குறிப்பாக வேடச்சந்தூர், உண்டார்பட்டி, அய்யம்பாளையம், பெரும்புள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கந்து வட்டி பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ஆட்சியர் அலுலகம் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களை விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!

இந்த நிலையில், கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் அதிகமாக வருவதால், அவற்றை விசாரிக்க 7 தனிப்படைகள் அமைத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, திண்டுக்கல் நகர், புறநகர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 உட்கோட்டங்களிலும் அந்தந்த டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படைகள் கந்துவட்டி தொடர்பான புகார்களை ரகசியமாக விசாரித்து, கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா உத்தரவிட்டு உள்ளார். மேலும், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய ஆதாரத்துடன், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.