கோழிக்கோடு விமான விபத்து: பணியாளர்கள் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 

கோழிக்கோடு விமான விபத்து: பணியாளர்கள் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நேற்று முன்தினம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 120 பேர் லேசான காயங்களுடனும் 20 பேர் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கேரளாவையே கலங்கச் செய்தது.

கோழிக்கோடு விமான விபத்து: பணியாளர்கள் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல கேரள அரசு சார்பிலும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களுள் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மொத்தமாக 600 பணியாளர்கள், விமான விபத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நிலையில், பணியாளர்கள் 600 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.