6 மணி நேரத்தில் ரூ.6.80 லட்சம் கோடி கொட்டி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்ந்தது

 

6 மணி நேரத்தில் ரூ.6.80 லட்சம் கோடி  கொட்டி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் யாரும் எதிர்பாராத வகையில் விறுவிறுப்பாக இருந்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6.80 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்ந்தது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தவுடன் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. மேலும், ஜி.எஸ்.டி. கவுன்சில் 20-25 பொருட்கள் மீதான வரியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

சென்செக்ஸ் உயர்வு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், மாருதி, இண்டஸ்இந்த் பேங்க், ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டு டி, வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் யெஸ்பேங்க் உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும், டெக்மகிந்திரா, டி.சி.எஸ்.மற்றும் இன்போசிஸ் உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,863 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 728 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.34 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.138.54 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6.80 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு  லாபம்

மும்பை பங்குச் சந்தையில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1921.15 புள்ளிகள் உயர்ந்து 38,014.62 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 569.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,274.20 புள்ளிகளில் முடிவுற்றது.