கொரோனா நிவாரண நிதிக்கு, உண்டியல் சேமிப்பை வழங்கிய 5 வயது சிறுமி!

 

கொரோனா நிவாரண நிதிக்கு, உண்டியல் சேமிப்பை வழங்கிய 5 வயது சிறுமி!

ஈரோடு

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நாமக்கல்லை சேர்ந்த 5 வயது சிறுமி, தனது உண்டியல் சேமிப்பை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் அருகேயுள்ள ஜந்துபானை புதுத்தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் அதே பகுதியில் உள்ள மளிகைக் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி நாராயணி. இவர்களது 5 வயது மகள் மேஹாஸ்ரீ. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி மேஹாஶ்ரீ, தனது தந்தை தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். இந்த நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்ததை அறிந்த சிறுமி, மேஹாஶ்ரீ தனது சேமிப்பிபை வழங்க முடிவு செய்தார்.

கொரோனா நிவாரண நிதிக்கு, உண்டியல் சேமிப்பை வழங்கிய 5 வயது சிறுமி!

இதற்காக, நேற்று பெற்றோருடன் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமி மேஹாஶ்ரீ, அங்கு ஆய்வுபணியில் ஈடுபட்டிருந்த வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து, தனது சேமிப்பு பணமான 10,000 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் முத்துசாமி மற்றும் ஆட்சியர் கதிரவன் ஆகியோர் சிறுமி மேஹாஸ்ரீயை வெகுவாக பாராட்டினார்கள். தனது உண்டியல் சேமிப்பை, பொதுமக்களின் நலனுக்காக வழங்கிய சிறுமியை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.