கொரோனாவால் தாயை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகள்… தமிழக அரசு உதவ கோரிக்கை!

 

கொரோனாவால் தாயை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகள்… தமிழக அரசு உதவ கோரிக்கை!

கிருஷ்ணகிரி

ஓசூரில் கணவரின்றி 5 பிள்ளைகளை வளர்த்து வந்த பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், அவரது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி லட்சுமி (53). இவர்களுக்கு சசிகலா(25), நிவிதா (22), தாக்‌ஷாயினி (20), கௌரி (18), முருகேஷ்வரி (16), சிவா (14) என 6 குழந்தைகள் உள்ளனர். ராமன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்த நிலையில், லட்சுமி அந்த பகுதியில் பலகாரக் கடை நடத்தி குழந்தைகளை வளர்த்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகள் சசிகலாவை உறவினருக்கு திருமணம் செய்து வைத்தார். மற்ற 5 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதம் லட்சுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், ஓசூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெற்றோர் இருவரும் உயிரிழந்ததால், ஆதரவின்றி 5 பிள்ளைகளும் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.

கொரோனாவால் தாயை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகள்… தமிழக அரசு உதவ கோரிக்கை!

இதனால் மூத்த மகள்கள் நிவிதா, தாக்‌ஷாயினி ஆகியோர் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பள்ளி செல்லும் தங்களது 2 தங்கைகளையும், தம்பியையும் பாதுகாத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே ஆதரவாக லட்சுமியின் சகோதரர் திகழும் நிலையில், அவருக்கு பின் தங்களுக்கு யாருமில்லை என குழந்தைகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, லட்சுமி ஓசூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று உயிரிழந்த நிலையில், காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக இறப்பு சான்றிதழ் அளித்து உள்ளனர். இதனால் தமிழக அரசின் நிவாரண உதவியை பெற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, லட்சுமி கொரோனா தொற்றால் தான் உயிரிழந்தார் என சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.