5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

 

5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.

 

 இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  இதனால் இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பயத்தில் உள்ளனர்.  இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ttn

இந்நிலையில் 5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9. 2019 அன்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.  அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.