5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் Vs பாஜக? யாருக்கு வாய்ப்பு?

 

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் Vs பாஜக? யாருக்கு வாய்ப்பு?

5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டன. குறிப்பாக, காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் 5 மாநிலங்களிலும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், இரண்டு கட்சியின் தலைவர்களும் போட்டிப் போட்டு பிரசாரம் செய்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 மாநிலங்களுக்கும் இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.  

இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில், மத்தியப்பிரதேசத்தில் பாஜக 126 இடங்களிலும், காங்கிரஸ் 89 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் மற்றவை 9 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

சத்தீஸ்கரை பொறுத்த வரையில், பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும் பாஜக 85 இடங்களுடன் எதிர்க்கட்சியாக அமையும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன,.

தெலங்கானா மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த டிஆர்எஸ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரலாம் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.