5 மாதத்துக்கு பிறகு காஷ்மீரில் மொபைல் போன்களில் மீண்டும் எஸ்.எம்.எஸ். வசதி!

 

5 மாதத்துக்கு பிறகு காஷ்மீரில் மொபைல் போன்களில் மீண்டும் எஸ்.எம்.எஸ். வசதி!

5 மாதத்துக்கு பிறகு நேற்று நள்ளிரவு முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொபைல் போன்களில் மீண்டும் எஸ்.எம்.எஸ். வசதி வழங்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அங்குள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், பிரிவினைவாதிகளை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் வைத்தது.

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு, தொலைத்தொடர்பு சேவை முடக்கம், இன்டர்நெட் துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்ப தொடங்கியதுடன் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டது.மேலும் காவலில் இருந்த பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் இன்டர்நெட் மற்றும் மொபைல் போன்களில் எஸ்.எம்.எஸ். வசதி கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.

காஷ்மீரில் இயல்பு நிலை

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொபைல் போன்களில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி வழங்கப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டது. அதேசமயம் பொதுமக்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது காஷ்மீரில் முற்றிலும் இயல்பு திரும்பி விட்டதால் விரைவில் பொதுமக்களும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.