5 நாளில் ரூ.3.90 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

 

5 நாளில் ரூ.3.90 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.90 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

5 நாளில் ரூ.3.90 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

தொடர்ந்து பல வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த வாரமும் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, பருவமழை பரவலாக இல்லாதது மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை தொடர்ந்து திரும்ப பெற்று வருகின்றனர் இது போன்ற காரணங்களால் கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடந்த வாரத்தில் 69 காசுகள் வீழ்ச்சி கண்டு ரூ.69.59ஆக சரிந்தது. கடந்த மாதம் 26ம் தேதியன்று இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ரூ.68.90ஆக உயர்ந்து இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்த பிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.98 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த மாதம் 26ம் தேதியன்று நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.88 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ரூ.3.90 லட்சம் கோடியை இழந்தனர். 

சென்செக்ஸ் சரிவு

கடந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 764.57 புள்ளிகள் குறைந்து 37,118.22 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 286.95 புள்ளிகள் இறங்கி 10,997.35 புள்ளிகளில் முடிவுற்றது.