40 நாள் லாக்டவுனால் ரூ.27 ஆயிரம் கோடி மது வருவாயை இழந்த அரசுகள்… மீண்டும் மது கடைகள் திறந்ததால் நிம்மதி…

 

40 நாள் லாக்டவுனால் ரூ.27 ஆயிரம் கோடி மது வருவாயை இழந்த அரசுகள்… மீண்டும் மது கடைகள் திறந்ததால் நிம்மதி…

கடந்த 3ம் தேதி வரையிலான 40 நாட்களில் மாநில அரசுகள் மது விற்பனை வாயிலான சுமார் மொத்தம் ரூ.27 ஆயிரம் கோடி வருவாயை இழந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுகள் சிறிது நிம்மதி அடைந்துள்ளன.

மது வாயிலான வருவாய்தான் பெரும்பாலான மாநிலங்களின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. அரசு பணியாளர்களுக்கு சம்பளம், திட்டங்களுக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள மது வருவாய் பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி வரையிலான கடந்த 40 நாட்களாக மாநில அரசுகளுக்கு மது வாயிலான வருவாய் வராமல் நின்று போனது. லாக்டவுனால் மது கடைகள் திறக்க அனுமதிக்கப்படாததே இதற்கு காரணம்.

மதுபான கடைகள் மூடல்

மது கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் ஒருபுறம் குடிக்க முடியாமல் பரிதவித்து வந்தனர். மறுபுறம் மது வருவாய் சுத்தமாக நின்று போனதால் செலவினங்களை எப்படி மேற்கொள்வது என மாநில அரசுகள் திகைத்து நின்றன. கடந்த 3ம் தேதி வரையிலான 40 நாட்கள் மதுகடைகள் மூடப்பட்டதால் மாநில அரசுகளுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.27,178 கோடி வருவாயை இழந்திருக்கும் என இன்டர்நேஷனல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின்கள் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 2019ம் ஆண்டில் மது மீதான கலால் வரி வாயிலாக மட்டும் மத்திய அரசுக்கு ரூ.2.48 லட்சம் கோடி கிடைத்தது எனவும் தெரிவித்தது.

மதுபான கடை

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் 3.0 அமலில் உள்ளபோதிலும், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில், சமூக விலகல் கடைபிடித்தல், கடை திறப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மது கடைகளை மே 4ம் தேதி (நேற்று) முதல் திறந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து நேற்று முதல் மது கடைகள் திறக்கப்பட்டன. குடிமகன்களும் நீண்ட வரிசையில் நின்று மது கடைகளில் மது வாங்கி சென்றனர். மது விற்பனை வாயிலாக மீண்டும் வருவாய் வர தொடங்கி இருப்பது மாநில அரசுகளுக்கு புது தெம்பு கொடுத்து இருக்கும். நேற்று டெல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் சமூக விலகல் விதிமுறைகளை குடிமகன்கள் காற்றி பறக்கவிட்டதால் அந்த பகுதிகளில் மதுகடைகளை போலீசார் வலுக்கட்டாயமாக அடைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.