4 தினங்களில் ரூ.70 ஆயிரம் கோடி அவுட்..சோகத்தில் முதலீட்டாளர்கள்…

 

4 தினங்களில் ரூ.70 ஆயிரம் கோடி அவுட்..சோகத்தில் முதலீட்டாளர்கள்…

இந்த வாரம் பங்குச் சந்தையால் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த வாரம் பங்குச் சந்தைகளில் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று (2ம் தேதி) பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் இந்த வாரம் வர்த்தக தினங்கள்  குறைந்தது. ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராகவே இருந்தது.

பங்கு வர்த்தகம்

கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் வாகன விற்பனை சரிவை சந்தித்தது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது. கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இது போன்ற பாதகமான அம்சங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஒட்டுமொத்த அளவில் வர்த்தகம் சரிவு கண்டது.

பி.எஸ்.இ.

இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ.140.28 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த 30ம் தேதியன்று நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.98 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.70 ஆயிரம் கோடியை இழந்தனர்.

கடந்த 4 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 351.02 புள்ளிகள் இறங்கி 36,981.77 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 77.05 புள்ளிகள் வீழ்ந்து 10,946.20 புள்ளிகளில் நிலை கொண்டது.