33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

 

33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு:  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மூலம் 5, 12, 18 சதவீதம் என தொடங்கி அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விகிதங்கள் பொருட்களுக்கு ஏற்றாற்போல் மாறுபடும். அதேபோல், ஜிஎஸ்டி வரம்பில் இருந்து சில பொருட்களை நீக்க வேண்டும் எனவும், பெட்ரோ, டீசல் உள்ளிட்டவைகளை ஜிஎஸ்டி வரம்பினுள் கொண்டு வர வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், தலைநகர் டெல்லியில் 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது, சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில், தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.