3 மாதத்தில் ரூ.3,802 கோடி லாபம் பார்த்த இன்போசிஸ்!

 

3 மாதத்தில் ரூ.3,802 கோடி லாபம் பார்த்த இன்போசிஸ்!

இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.3,802 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது நிதிநிலை முடிவுகளை காலாண்டுக்கு (3 மாதம்) ஒருமுறை வெளியிட்டு வருகின்றன. நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகளை வைத்தே அந்த நிறுவனத்தின் நிலைமையை தெரிந்து கொள்ளலாம். தற்போது ஜூலை மாதம் நடப்பதால், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) நிதிநிலை அறிக்கைகளை நிறுவனங்கள் வெளியிட தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது இன்போசிஸ் நிறுவனம் நேற்று நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது.

இன்போசிஸ்

நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமாக இன்போசிஸ் விளங்குகிறது. இன்போசிஸ் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் காலாண்டில் ரூ.21,803 கோடி வருவாய் கிடைத்தது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். மேலும் இன்போசிஸ் நிகர லாபமாக ரூ.3,802 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5.26 சதவீதம் அதிகமாகும்.

இன்போசிஸ் அலுவலகம்

இந்த நிதியாண்டில் (2019-20)  புதிதாக (ப்ரஷர்ஸ்) 18 ஆயிரம் பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் கூறியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இன்போசிஸ் பங்கு விலை 0.87 சதவீதம் உயர்ந்து ரூ.727.10-ஆக அதிகரித்தது.