3 மாசத்துல ரூ.1,221 கோடி லாபம் பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி….

 

3 மாசத்துல ரூ.1,221 கோடி லாபம் பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி….

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,221 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,221 கோடி ஈட்டியுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.969 கோடியாக இருந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

கடந்த மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த வருவாய் ரூ.20,913.82 கோடியிலிருந்து ரூ.23,443.66 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த வாராக் கடன் 5.53 சதவீதமாக குறைந்து இருந்தது. 2019 மார்ச் 31ல் இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 6.70 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இதே காலத்தில் நிகர வாராக் கடன் 2.06 சதவீதத்திலிருந்து 1.41 சதவீதமாக குறைந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

கடந்த மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.87 சதவீதமாக இருந்தது. மேலும் அதே காலாண்டில் அந்த வங்கியின் கட்டண வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அந்த காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.3,242 கோடி ஒதுக்கீடு (கோவிட்-19 தொடர்பான ஒதுக்கீடு மற்றும் வரிக்கான ஒதுக்கீட்டை தவிர்த்து) செய்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இருப்பு நிலையை மேலும் வலுப்படுத்த நிலையான சொத்துக்களுக்கு எதிராக ரூ.2,725 கோடியை கோவிட்-19 தொடர்பான ஒதுக்கீடு செய்துள்ளது.