28 ஆண்டுகால வேதனைக்கு தீர்வு கிடைத்துள்ளது: அற்புதம்மாள் நெகிழ்ச்சி

 

28 ஆண்டுகால வேதனைக்கு தீர்வு கிடைத்துள்ளது: அற்புதம்மாள் நெகிழ்ச்சி

சென்னை: பேரறிவாளன் விவகாரத்தில் 28 ஆண்டு காலமாக இருந்த வேதனைக்கு தீர்வு கிடைத்துள்ளது என முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பிறகு அற்புதம்மாள் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் மீது எந்த குற்றமும் இல்லை என ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி உட்பட பலர் கூறியும் அவருக்கான நீதி கிடைக்காமல் இருந்தது. இருப்பினும் அவரும், அவரது தாயாரும் தொடர்ந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்வது தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பல வருடங்களாக தனது மகனுக்காக ஓயாமல் போராடிய அற்புதம்மாளை ஆனந்தத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்ததை அடுத்து, அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. 7 பேர் குடும்பத்தினருக்கும் நிம்மதி கொடத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்றார். #arputhammal #perarivalan #edappadipalanisamy