இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் போய்விட்டதே..கொந்தளிக்கும் திரையுலகம்

 

இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் போய்விட்டதே..கொந்தளிக்கும் திரையுலகம்

இந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது திரைப்பட தணிக்கை வாரியம். இந்த தணிக்கை வாரியத்தின் முடிவில் பட தயாரிப்பாளர்கள் முரண்படும் பட்சத்தில் அவர்கள் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடுவது வழக்கம்.

இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் போய்விட்டதே..கொந்தளிக்கும் திரையுலகம்

அண்மையில் ப்ளூ சட்டை மாறனின் ’இன் ஆன்ட்டி’ இந்தியன் படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு தடை போட்டது. இதையடுத்து படக்குழுவினர் மேல்முறையீடு செய்து படத்தை வெளியிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். சமகால அரசியல், சமூக சூழ்நிலை பற்றிய பிரச்சனைகளை துணிச்சலாக கூறியிருந்த அந்த படம் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

காரணம், 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

தணிக்கை வாரியத்தின் முடிவுடன் முரண்பட்டால் தயாரிப்பாளர்கள் இனிமேல் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு பாலிவுட், கோலிவுட் திரைப்படத்துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பட வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதுடன் துணிச்சலான கருத்துக்களை சொல்வதற்கு இனி தயாரிப்பாளர்கள் தயங்கும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் போய்விட்டதே..கொந்தளிக்கும் திரையுலகம்

’’தூத்துக்குடி சாத்தான்குளம் போன்ற சம்பவங்களை இனி படமாக்க முடியாது’’ என்று இயக்குனர் வசந்தபாலன் வேதனை தெரிவிக்கிறார். அவர் மேலும், பராசக்தி, ஜோக்கர் மாதிரியான படங்கள் இனி வரவே முடியாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

திரைப்பட விமர்சகர் பிஸ்மி, தயாரிப்பாளர்களுக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கையையும் மத்திய அரசு தகர்த்து விட்டது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் சமூக பிரச்சனைகளை கொண்ட படங்களை இனி எடுக்க முடியாது என்கிற வகையில் மத்திய அரசு இந்த காரியத்தை செய்திருக்கிறது . சமூக பிரச்சினைகளை கொண்ட படங்கள் வருவதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்பதையே இந்த முடிவு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்