செங்கல்பட்டு மாவட்டத்தில் 235 ஏரிகள் நிரம்பியன; உடையும் அபாயம்!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் 235 ஏரிகள் நிரம்பியன; உடையும் அபாயம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள 235 ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து கொண்டே வருவதால் ஏரிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2வது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கன மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தின் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மொத்தம் 528 ஏரிகள் உள்ளன. இவற்றில் 235 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பிற ஏரிகள் 80 சதவீதம் நிரம்பியுள்ளன. மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் மொத்த கொள்ளளவு 23.3 அடியாகும். தற்போது, 18 அடி நிரம்பி விட்டது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மதுராந்தகம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன் 273 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு குறித்து அவசர உதவி எண்ணான 044-27427412 மற்றும் 1077 உள்ளிட்ட எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.