முதல்வருக்கு ராமதாஸ் – கமல் கொடுக்கும் அழுத்தம்

 

முதல்வருக்கு ராமதாஸ் – கமல் கொடுக்கும் அழுத்தம்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலியான வழக்கில், ’’பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?’’என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்நிலையில் சிவகாசியில் மேலும் விபத்தும் தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாசும், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

முதல்வருக்கு ராமதாஸ் – கமல் கொடுக்கும் அழுத்தம்

சிவகாசியை அடுத்த காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உலகத்தர மருத்துவம் வழங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும், ’’சிவகாசி பகுதியில் இந்த மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது என்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு பட்டாசு ஆலைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!’’என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.


’’பட்டாசுத் தொழில்துறையில், பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று நீதிமன்றம் சினக் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஆறு பேர் பலியாகியிருக்கிறார்கள். இனியும் அரசு மௌனம்தான் காக்கப்போகிறதா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் கமல்ஹாசன்.