Home அரசியல் திடீரென பாய்ந்த ஊபா சட்டம்; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என சீமான் ஆவேசம்

திடீரென பாய்ந்த ஊபா சட்டம்; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என சீமான் ஆவேசம்

கடந்த 2019 ம் ஆண்டில் கேரள மாநிலத்தில், அம்மாநில அரசால் படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த செயல்பாட்டாளர் மணிவாசகம் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ், தருமபுரி சித்தானந்தம் ஆகியோரைக் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஜனநாயக நாட்டில் ஒருவரது இறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்கான உரிமையையே மறுத்து, அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமைகளாக வரையறுத்து வழங்கியுள்ளவற்றிற்கே எதிராக, இறுதி நிகழ்வில் பங்கேற்றதற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளை ஊபா எனும் ஆட்தூக்கிச் சட்டத்தில் கைதுசெய்து சிறைப்படுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுப் பதியப்பட்ட வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், தற்போது திடீரென காவல்துறை கைது செய்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவைத் தோற்கடிப்போம் எனும் முழக்கத்தை முன்வைத்து, கடந்த ஜனவரி 20 ம் தேதி அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த கூட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே, இந்த கைது நிகழ்வு நடைபெற்றுள்ளதால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்கிறார்.

சீமான்

இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் மீதுகூட வழக்குப்பதிவு செய்து சிறைப்படுத்துவது என்பது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலாகும். மக்கள் உரிமைக்காகப் போராடும் ஜனநாயக அமைப்புகளை இத்தகைய பொய்வழக்குகள் மூலம் அச்சுறுத்தி முடக்குவது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும் என்று தெரிவித்துள்ள சீமான், கைது செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews