செங்கோட்டையில் சீக்கிய கொடி – விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றியா ?

 

செங்கோட்டையில் சீக்கிய கொடி – விவசாயிகள்  போராட்டத்துக்கு வெற்றியா ?

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் யாரும் எதிர்பார்க்காத கட்டத்தை அடைந்துள்ளது . இன்று நடந்த டிராக்டர் பேரணி மூலம் பல தடைகளை உடைத்த விவசாயிகள், செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றி அங்கு தேசிய கீதம் பாடினர். இந்த நிகழ்வை மிகப்பெரிய வெற்றிக் கொண்டாட்டமாக சமூக வலைதளங்கள் சித்தரிக்கின்றன.

செங்கோட்டையில் சீக்கிய கொடி – விவசாயிகள்  போராட்டத்துக்கு வெற்றியா ?

இந்த வெற்றி மட்டும் விவசாயிகளுக்கு போதுமா ? இதற்காகத்தான் இத்தனை நாட்களாக விவசாயிகள் அமைதியாக போராடினார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும், எனவே அதை திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாக இருந்தது.

கடந்த 65 நாட்களாக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம், இந்த நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால், இன்று வேறொரு வடிவத்தை எட்டியது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. குடியரசு தினத்தின் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டதுகூட, மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவும், தேசிய அளவில் கவனத்தை திருப்பலாம் என்பதாக புரிந்து கொள்ளலாம். இதன்மூலம் அந்த வேளான் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் விவசாயப் போராட்டத்தின் மையமான நோக்கமாகும்.

செங்கோட்டையில் சீக்கிய கொடி – விவசாயிகள்  போராட்டத்துக்கு வெற்றியா ?

அந்த மையமான நோக்கத்தினால்தான் அகிம்சை வழியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்தனர். மத்திய அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளின்போதும் உடன்பாடு எட்டாத நிலையில், விவசாயிகள் காட்டிய உறுதியும் , அகிம்சையும் மெச்சத் தகுந்ததாக இருந்தது.

பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய தேவை எழுந்தது. அதனால்தான் குடியரசு நாளில் டெல்லிக்குள் பேரணி என விவசாயிகள் அறிவித்தனர். இந்த பேரணி நாடு முழுவதும் கவனத்தை திருப்பலாம் என நினைத்த நிலையில், வன்முறைக் களமாக மாறியது யாரும் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

செங்கோட்டையில் சீக்கிய கொடி – விவசாயிகள்  போராட்டத்துக்கு வெற்றியா ?

பேரணியை நடத்தக் விடக்கூடாது என ஆரம்பம் முதலே டெல்லி போலீஸ் தடுத்த நிலையில், திட்டமிட்டபடி பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் உறுதியுடன் நின்றனர். விவசாயிகளின் உறுதிக்கு பின்னர், டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது. நகருக்குள் நுழையாமல், புறநகர் பகுதிகளிலேயே பேரணியை நடத்த அனுமதி வழங்கியிருந்தது காவல்துறை.

புறநகர் பகுதிகளில் பேரணி நடத்துவது எந்த வகையிலும் நாட்டின் கவனத்தை திசை திருப்ப முடியாது என்கிற எண்ணத்தில் விவசாயிகள் மத்திய டெல்லியில் நோக்கி பயணித்தனர். பல தடுப்புகளை உடைத்து எறிந்தனர். காவல்துறையும் இதற்கேற்ப முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருந்ததை கவனிக்க முடிகிறது. முதலில் கண்ணீர் புகை குண்டுகள் வெடித்தன. அதன் பின்னர் பல இடங்களில் காவல்துறை தடியடி நடத்தியது. விவசாயிகளும் பதிலுக்கு தாக்கியதை பார்க்க முடிந்தது. தடைகளை உடைத்து வந்த விவசாயிகள் செங்கோட்டையில் சீக்கிய கொடிகளையும், விவசாய கொடிகளையும் ஏற்றினர். அங்கும் காவல்துறை மிகப்பெரிய தடியடி நடத்தியது.

செங்கோட்டையில் சீக்கிய கொடி – விவசாயிகள்  போராட்டத்துக்கு வெற்றியா ?

விவசாயிகள் செங்கோட்டையில் கொடியேற்றிய நிகழ்வும் , காவல்துறை தாக்குதலும் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற விவாதம் தீவிரமடைந்த நிலையில், விவசாயிகள் வன்முறையா ? காவல்துறை வன்முறையா ? என்கிற விவாதத்தில் விவசாயிகள் போராட்டம் வந்து நிற்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தை இந்த கட்டத்துக்கு கொண்டு வந்ததில் மத்திய அரசுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றோர் நேரடியாக இந்த விவகரத்தில் தலையிடவே இல்லை. பல அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை கடைசி வரை ஏற்கப்படவில்லை. இதுதான் விவசாயிகளின் போராட்டம் இந்த கட்டத்துக்கு வர காரனமாக அமைந்தது.

டெல்லி டிராக்டர் பேரணி மூலம் , விவசாயிகள் போராட்டம் வெற்றி அடைந்தது என்று கூறுவதற்கு வாய்ப்பில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் விவசாயிகளின் போராட்டம் முழுமை பெறுவதில்லை. தங்கள் நோக்கம் அதுதான் எனில் செங்கோட்டையில் கொடியேற்றியதில் விவசாயிகள் பெருமை படுவதற்கு ஒன்றுமில்லை.