2020 ரீவைண்ட்: சென்செக்ஸை புரட்டிப்போட்ட ஊரடங்கு

 

2020 ரீவைண்ட்: சென்செக்ஸை புரட்டிப்போட்ட ஊரடங்கு

கொரோனா பொதுமுடக்கத்தால் இந்த ஆண்டு இந்தியப் பங்குச் சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியும் வரலாறு காணாத உச்சத்தையும் தொட்டன. இந்நிலையில் பங்குச் சந்தைகளின் புள்ளி விவரங்களைக் காணலாம்.

நடப்பாண்டில் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களை கண்டன. மார்ச் மாத இறுதியில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால்  சிறு முதல் பெரிய நிறுவனங்களும் மூடப்பட்டன. சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பொதுமுடக்கம் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து முதலீடுகளை வெளியே எடுத்தனர். இதனால் இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டும், பொருளாதாரத்தை மேம்படுத்த ஊக்க சலுகைத் திட்டங்களை அறிவித்தது, அமெரிக்க அதிபர் தேர்தல், சந்தைகளில் முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சம் கண்டன.

ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 16ஆம் தேதி முப்பைப் பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 42 ஆயிரத்து 59 என்ற இதுவரை இல்லாத புள்ளிகளைத் தொட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் பங்குச் சந்தைகள் காணப்பட்டன. இந்தச் சூழலில் மார்ச் மாத இறுதியில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படப்போவதாக அறிவிக்கப்பட்ட பிறகு  சென்செக்ஸ் சுமார் 16 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி கண்டு இந்த ஆண்டின் குறைந்தபட்ச அளவாக மார்ச் 24ஆம் தேதி 25 ஆயிரத்து 638 புள்ளிகளைத் தொட்டது. தொடர்ந்து பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட சந்தை டிசம்பர் 18ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக 47 ஆயிரத்து 26 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

அதேபோல, தேசியப் பங்குச் சந்தையின் நிப்டியும், ஜனவரி 20ஆம் தேதி 12 ஆயிரத்து 430 என்ற முன்னெப்போதும் இல்லாத புள்ளிகளைத் தொட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், மார்ச் 24ஆம் தேதி 7 ஆயிரத்து 511 என்ற ஆண்டின் குறைவான புள்ளிகளை தொட்டது. பின்னர் பொதுமுடக்கத்தில் தளார்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியதால் ஆண்டு இறுதியில் டிசம்பர் நடுபகுதியில் 13 ஆயிரத்து 773 என்ற புதிய உச்சத்தை எட்டியது.