2020 சாதனை: கொரோனாவிலும் சாதனை படைத்த தமிழகம்!

 

2020 சாதனை: கொரோனாவிலும் சாதனை படைத்த தமிழகம்!

இத்தனை பேரிடருக்கு நடுவிலும் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறது தமிழகம். கொரோனா தொற்று காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து நாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கொரோனாவால் உள்ளூர் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை ஆட்டம் கண்டது. ஆனால் தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. இது இனிவரும் காலங்களில் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும். ஆனால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதால் கொரோனா உச்சம் இருந்த காலத்திலேயே தமிழகம் முதலீடுகளை ஈர்த்தது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 12ஆம் தேதி 10 ஆயிரத்து 55 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொழில் திட்டங்களை தமிழகத்தில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.

2020 சாதனை: கொரோனாவிலும் சாதனை படைத்த தமிழகம்!

அதனைத் தொடர்ந்து டிசம்பரில் 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 26 ஆயிரத்து 509 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் மதிப்பில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. 27 ஆயிரத்து 324 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் மதிப்பில் 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல, 47 கோடி ரூபாய் மதிப்பில் 385 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் காமர் ஐடி ஃசோன் என்ற நிறுவனத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் காலத்தில் தமிழகம் இவ்வளவு முதலீடுகளை ஈர்த்தது இந்திய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 2021ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.